- Home
- இந்தியா
- 3 கோரிக்கைகளையும் ஏற்ற மத்திய அரசு! CJP போராட்டம் வாபஸ்! இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகர்!
3 கோரிக்கைகளையும் ஏற்ற மத்திய அரசு! CJP போராட்டம் வாபஸ்! இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகர்!
CJP Calls Off Delhi Protest: கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உள்பட 3 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதால் டெல்லியில் 37 நாட்களாக நடந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் வாபஸ்
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தனது 37 நாள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டம், தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் 'நல்லெண்ண அடிப்படையில்' முடிவுக்கு வந்ததாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், CJP-யின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேசினார். "ஒத்துக்கொண்ட விஷயங்களை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன், இந்த போராட்டத்தை நாங்கள் நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெறுகிறோம்" என்று அவர் கூறினார்.
3 கோரிக்கைகளையும் ஏற்ற மத்திய அரசு
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, CJP இந்த அறிவிப்பை வெளியிட்டது. நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இந்தியா முழுவதும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்-களை (FIR) திரும்பப் பெறவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
CJP அமைப்பு, அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கை மனுவை அளித்துள்ளது. இதுகுறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நான்கு வாரங்களுக்குப் பிறகு நடைபெறும். செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா இதுபற்றிப் பேசுகையில், "நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டிருந்தோம். சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அந்தக் குடும்பங்களுக்கு கௌரவமான இழப்பீடு வழங்கப்படும் என அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
கல்வியில் சீர்திருத்தம் செய்ய கோரிக்கை
இது தவிர, கல்வி மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் கோரி ஐந்து அம்ச கோரிக்கை மனுவையும் அரசிடம் கொடுத்திருக்கிறோம். இந்த சீர்திருத்தங்கள் குறித்து நான்கு வாரங்களில் மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்வதால், போராட்டத்தை வாபஸ் பெற விரும்புகிறோம்" என்றார்.
"எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுவிட்டன. எனவே, போராட்டக்காரர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு, அமைதியாக வீடு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிப்போம்" என்றும் அவர் கூறினார்.
போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்
ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் நடந்த 'சலோ சன்சத்' பேரணிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் போராட்டக்காரர்கள் மீது பல எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் CJP கோரியிருந்தது. இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதாக சௌரவ் தாஸ் உறுதிப்படுத்தினார்.
சௌரவ் தாஸ் மேலும் கூறுகையில், "டெல்லியில் மட்டுமல்ல, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர்-களை திரும்பப் பெற வேண்டும் என்பது எங்களின் இரண்டாவது கோரிக்கை. அதையும் அரசு ஏற்றுக்கொண்டது. விரைவில் வழக்குகள் திரும்பப் பெறப்படும். டெல்லியில் மட்டும் 15 முதல் 20 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன் நகல்களை மூன்று நான்கு நாட்களில் தருவதாக அரசு உறுதியளித்துள்ளது" என்றார்.
தர்மேந்திர பிரதான் சொன்னது என்ன?
முன்னதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். "மாணவர்களின் நலனுக்காகவும், நாட்டின் இளைஞர்கள் ஒரு குழப்ப வலையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவும்" பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

