சி.பி.எஸ்.இ., 10ஆம் வகுப்புக்கு 2026 முதல் ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
சி.பி.எஸ்.இ., 2026 முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்தும். மாணவர்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள இது வாய்ப்பளிக்கும்.

சி.பி.எஸ்.இ., 10ஆம் வகுப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), 2026 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாக சி.பி.எஸ்.இ., தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு
இது குறித்து சன்யாம் பரத்வாஜ் கூறியதாவது:
"2026 ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ., அங்கீகரித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி, முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும்.
மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு
மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும். முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதத்திலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்திலும் வெளியிடப்படும்.
முதல் தேர்வில் கலந்து கொள்வது கட்டாயம். இரண்டாம் தேர்வில் மாணவர்கள் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும், மாணவர்கள் இரண்டாவது தேர்வில் கலந்துகொண்டு கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும்.
பாடங்களில் மேம்படுத்திக் கொள்ள அனுமதி
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடம் ஆகிய முக்கிய பாடங்களில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கவும், சிறந்த மதிப்பெண்கள் பெற அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.