- Home
- இந்தியா
- டிவி, ஸ்மார்ட்போன், மது விருந்து..! பெங்களூரு சிறையில் கைதிகள் ராஜ வாழ்க்கை..! அதிர்ச்சி!
டிவி, ஸ்மார்ட்போன், மது விருந்து..! பெங்களூரு சிறையில் கைதிகள் ராஜ வாழ்க்கை..! அதிர்ச்சி!
Parappana Agrahara Jail Luxury: பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் டிவி, ஸ்மார்ட்போன், மது விருந்து என கைதிகள் ராஜ வாழ்க்கை வாழும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பெங்களூரு சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் சந்தேகத்திற்குரிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி ஷகீல், வக்கிர புத்தி கொண்ட உமேஷ் ரெட்டி ஆகியோருக்கு ராஜ உபச்சாரம் அளிக்கப்படும் வீடியோக்கள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில் உமேஷ் ரெட்டி தனது சிறை அறைக்குள் இரண்டு ஆண்ட்ராய்டு போன்கள், ஒரு கீபேட் போன் மற்றும் ஒரு டிவி ஆகியவற்றைப் பயன்படுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை
மேலும் கைதிகள் மது அருந்தி, கபாப் சாப்பிட்டு, தட்டுகள் மற்றும் டிரம்களை தட்டி உற்சாகமாக நடனமாடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பரப்பன அக்ரஹாரா சிறையிலா அல்லது வேறு சிறையிலா என்பது உறுதியாக தெரியவில்லை.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகின்றனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உஷாரான சிறை அதிகாரிகள், பரப்பன அக்ரஹாரா சிறை அறைகளில் சோதனை நடத்தினர்.
அதிரடி சோதனை
மொத்தம் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைதிகளின் அறைகளை சோதனை செய்தனர், ஆனால் சோதனையின் போது எந்தப் பொருளும் சிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. சோதனையின் போது எந்தப் பொருளும் சிக்காததால், சோதனை குறித்த தகவல் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
யார் இந்த ஜுஹாத் ஹமீத் ஷகீல்?
பெங்களூரு திலக் நகரைச் சேர்ந்த ஜுஹாத் ஹமீத் ஷகீல், அடிப்படைவாத சிந்தனை கொண்ட முஸ்லிம் இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு செய்து வந்துள்ளார். 'இக்ரா சர்க்கிள்' என்ற பெயரில் ஆன்லைன் குழுவை உருவாக்கி தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு நடத்தியுள்ளார். அதன்படி, பெங்களூருவைச் சேர்ந்த நால்வரை சிரியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சட்ட ஒழுங்கின் மீது சந்தேகம்
ஆனால், துருக்கியின் இஸ்தான்புல் அகதிகள் முகாமிலேயே இருவர் உயிரிழந்தனர். சிரியா முழுவதும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்த ஷகீல், 2020-ல் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டார். 2022-ல் சவுதியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக பரப்பன அக்ரஹாரா சிறையில் ஷகீல் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால், தண்டனைக் கைதிக்கு சிறப்பு உபசரிப்பு வழங்கப்படுவது சட்ட ஒழுங்கின் மீதே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
உள்துறை அமைச்சர் விளக்கம்
பரப்பன அக்ரஹாரா கைதிகளுக்கு விதிகளை மீறி சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். மாநில சிறைகளில் கைதிகளின் ஆடம்பர வாழ்க்கை குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும். அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.