- Home
- உடல்நலம்
- Nipah Virus : மீண்டும் வேகமெடுத்த நிபா வைரஸ்.. தற்காத்துக்கொள்வது எப்படி? தடுக்கும் முறைகள்
Nipah Virus : மீண்டும் வேகமெடுத்த நிபா வைரஸ்.. தற்காத்துக்கொள்வது எப்படி? தடுக்கும் முறைகள்
நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் எப்படி பரவுகிறது? இதன் தடுப்பு முறைகள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

How to protect yourself from Nipah virus?
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்றுதான் நிபா வைரஸ். இது மூளையில் அலர்ஜி மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி மரணத்திற்கும் வழிவகுக்கும். தற்போது வரை நிபா வைரஸுக்கு என்று குறிப்பிட்ட சிகிச்சை முறைகளோ அல்லது தடுப்பூசிகளோ கிடையாது, தற்காப்பு முறைகள் மட்டுமே பலன் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவில் இதுவரை இருவர் நிபா வைரஸால் மரணம் அடைந்துள்ளனர். நிபா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நிபா வைரஸ் எப்படி பரவுகிறது?
வௌவால்கள் கடித்த பழங்களின் மூலமாகவே நிபா வைரஸ் பரவுகின்றன. வௌவால்கள் கடித்த பழங்கள் வௌவால்களின் எச்சில், சிறுநீர், மலம் ஆகியவை கலந்த பழங்கள், பனைமர கள்ளு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் நிபா வைரஸ் பரப வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட பன்றிகளை தொடுவதன் மூலமாகவும் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவலாம். பாதிக்கப்பட்ட நபரின் சளி, வியர்வை, இரத்தம் போன்ற உடல் திரவங்கள், சுவாச நீர்த் துளிகள் மூலமாக நிபா வைரஸ் பிற மனிதர்களுக்கு பரவும். பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பவர்கள் அல்லது மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம்.
நிபா வைரஸின் அறிகுறிகள் என்ன?
நிபா வைரஸ் அறிகுறிகள் பொதுவாக 4 நாட்கள் முதல் 14 நாட்களுக்குள் தென்பட ஆரம்பிக்கும். காய்ச்சல், தலை வலி, தசை வலி, வாந்தி, தொண்டை வலி, தலைசுற்றல், சோர்வு, மனக்குழப்பம், தூக்க பாதிப்புகள், சுயநினைவை இழத்தல், வலிப்பு, மூளை வீக்கம், மூளை அழற்சி, சுவாசப் பிரச்சனைகள், நுரையீரல் பாதிப்பு, நிமோனியா ஆகியவை நிபா வைரஸின் அறிகுறிகள் ஆகும். சில சமயங்களில் அறிகுறிகள் இன்றி கூட வைரஸ் தொற்று ஏற்படலாம். வைரஸை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். வௌவால்கள் கடித்ததாக சந்தேகப்படும் பழங்களை தவிர்க்க வேண்டும். தரையில் விழுந்த பழங்களை சாப்பிடக்கூடாது. பழங்களை வாங்கிய பின்னர் நன்றாக கழுவி தோலை நீக்கி அதன் பின் சாப்பிட வேண்டும். பழச்சாறுகள், பனை கள்ளு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
நிபா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
வௌவால்கள், பன்றிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளுடன் நேரடி தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். விலங்குகள் இறந்து கிடந்தால் அவற்றை கையாளும் பொழுது கையுறைகள், முகமூடிகள் போன்றவற்றை அணிய வேண்டும். வௌவால்கள் கூடு கட்டும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் இருந்து பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும். சோப்பு கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். ஆல்கஹால் கலந்த ஹேண்ட சானிடைசரை பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட நபர்களை பராமரிக்கும் பொழுது முகமூடி கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்கள் மற்றும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும்.
நிபா வைரஸ்க்கு சிகிச்சை முறைகள் என்ன?
காய்ச்சல், தசை வலி, தலை வலி, வாந்தி ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அறிகுறிகளை மறைத்தல் கூடாது. நிபா வைரஸுக்கு என்று குறிப்பிட்ட எதிர்ப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லை. இதற்கு ஆதரவு சிகிச்சைகள் மட்டுமே உள்ளது. திரவங்கள் வழங்குதல், வலி நிவாரணிகள், சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் தீவிரமாக கண்காணித்தல் ஆகியவே இதற்கான சிகிச்சை முறைகள் ஆகும். இது ஒரு உயிர்க் கொல்லி என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். சுகாதாரத்துறை வெளியிடும் வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளலாம்.