- Home
- உடல்நலம்
- Agarbatti: உயிருக்கு வேட்டு வைக்கும் ஊதுபத்தி புகை? சிகரெட்டை விட டேஞ்சராம்.! மறைந்திருக்கும் பேராபத்துக்கள்.!
Agarbatti: உயிருக்கு வேட்டு வைக்கும் ஊதுபத்தி புகை? சிகரெட்டை விட டேஞ்சராம்.! மறைந்திருக்கும் பேராபத்துக்கள்.!
ஊதுபத்தியில் இருந்து வெளிவரும் புகையானது, சிகரெட் புகையை விட ஆபத்தானது என்கிற ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊதுபத்தி புகையில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்
ஊதுபத்தி இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். வீடுகள், கோயில்கள், தியான அறைகள் என எங்கும் நறுமணத்துடன் கூடிய ஒரு அமைதியான சூழலை உருவாக்க ஊதுபத்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த புனிதமான ஊதுபத்தியில் இருந்து வெளிவரும் புகையானது சிகரெட் புகையை விட ஆபத்தானது என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று ஊதுபத்தி புகை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதன் அபாயகரமான விளைவுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஊதுபத்தி புகை குறித்து ஆய்வு நடத்திய சீன விஞ்ஞானிகள்
தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஊதுபத்தி புகையின் வேதியல் கலவை மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு "Particulate matter emission and characterization from the burning of incense" என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டது. ஆய்வில் ஊதுபத்தி புகையானது சிகரெட் புகையை ஒத்த பல்வேறு வகையான நச்சு மற்றும் எரிச்சலூட்டும் சேர்மங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டது. ஊதுபத்தி புகையிலிருந்து வெளிப்படும் நுண் துகள்கள் (Particulate Matter - PM2.5, PM10) நுரையீரலுக்கு ஆழமாகச் சென்று சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள் உள்ளிட்ட தீவிரப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. ஊதுபத்தி கார்பன் மோனாக்சைடை வெளியிடுகின்றன. இது ரத்தத்தில் கலக்கும் பொழுது ஆக்ஸிஜன் அளவு குறைந்து தலைவலி, குமட்டல் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் மரணம் கூட ஏற்படலாம்.
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் ஊதுபத்தி புகை
ஊதுபத்தி புகையிலிருந்து வெளியிடப்படும் கந்தகடை ஆக்சைடு சுவாசக் கோளாறுகளையும், நைட்ரஜன் டை ஆக்சைடு தீவிர சுவாசத் தொற்றுக்களையும் ஏற்படுத்தலாம். ஊதுபத்தி புகையிலிருந்து வெளியாகும் ஃபார்மால்டிஹைடு, அசிட்டால்டிஹைடு போன்ற சேர்மங்கள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளாக அறியப்படுகின்றன. மேலும் பென்சோ பைரீன் போன்ற சேர்மங்கள் புற்றுநோய் மற்றும் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. ஆய்வாளர்கள் ஊதுபத்தி புகையின் மாதிரிகளை நேரடியாக முட்டைகளில் செலுத்தி அவற்றின் விளைவுகளை பரிசோதித்தனர். அப்போது நேர்மறை மரபணு நச்சுத்தன்மை வெளியிடப்பட்டது கண்டறியப்பட்டது. அதாவது இந்த புகையானது செல்களை தாக்கி அவற்றின் மரபணு பொருட்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டுள்ளது அறியப்பட்டது. இதுவே புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.
சிகரெட் புகையை விட ஊதுபத்தி புகை ஏன் மோசமானது?
சிகரெட் புகையை போலவே ஊதுபத்தி புகையானது நுரையீரல் அழற்சி, சுவாசக் குழாயில் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடியது. நீண்ட காலமாக ஊதுபத்தி புகைக்கு ஆளவோர் மத்தியில் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயம் அதிகம் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. இந்த ஆய்வின்படி ஊதுபத்தி புகையில் உள்ள சில சேர்மங்களின் அளவு சில சமயங்களில் சிகரெட் புகையை விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம். குறிப்பாக மூடிய அறைகளில் ஊதுபத்தி எரியும் பொழுது நுண்துகள்கள், புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களின் செறிவு அதிகமாக இருக்கும். சிகரெட்டுகள் பொதுவாக வெளிப்படையான அல்லது காற்றோட்டமான இடங்களில் புகைக்கப்படுகின்றன. இருப்பினும் இவை பாதுகாப்பானவை அல்ல. ஆனால் ஊதுபத்திகள் கோயில்கள், பூஜை அறைகள், சிறிய, காற்றோட்டமில்லாத அறைகளில் எரிக்கப்படுகின்றன.
பாதுகாப்பாக ஊதுபத்தி பயன்படுத்தும் முறைகள்
இதன் காரணமாக புகையின் செறிவு அதிகரித்து மக்கள் இந்த புகையை உள்ளே இழுக்கும் நேரம் அதிகரிக்கிறது. அதிக நேரம் இந்த புகையை சுவாசிப்பது நீண்ட காலத்திற்கு அதிக தீங்கை விளைவிக்கும். இந்த ஆய்வானது ஊதுபத்தி பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பான பயன்பாட்டை வலியுறுத்துகிறது. ஊதுபத்தி எரியும் பொழுது கதவுகள் ஜன்னல்களை திறந்து வைத்து நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும். சிறிய காற்றோட்டம் இல்லாத அறைகளில் நீண்ட நேரம் ஊதுபத்தி ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். தரமான இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஊதுபத்திகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக நறுமணங்கள், செயற்கை நறுமணங்கள், செயற்கை நிறமிகள், ரசாயனங்கள் கலந்த ஊதுபத்திகள் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.
இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊதுபத்திகளை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிகம் நறுமணம் வர வேண்டும் என்பதற்காக நிறைய ஊதுபத்திகள் ஏற்றக்கூடாது. முடிந்தால் எலக்ட்ரிக் டிஃப்யூசர்கள் அல்லது அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி நறுமணத்தை உருவாக்கலாம். ஊதுபத்தி என்பது நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகும். இந்த பதிவானது ஊதுபத்தியின் புகை மற்றும் ஊதுபத்தியில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலுக்கு ஏற்படுத்தும் தீங்கை குறித்து விளக்குவதற்காக மட்டுமே. ஊதுபத்தி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும் அதன் அபாயகரமான விளைவுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல் இங்கு பகிரப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயன்பாட்டு முறைகளை கடைப்பிடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.