- Home
- உடல்நலம்
- உணவு
- Food Noise: வயிறு ஃபுல்லா இருந்தாலும் சாப்பிட தோணுதா? அப்போ உங்களுக்கு இதுதான் பிரச்சனை!
Food Noise: வயிறு ஃபுல்லா இருந்தாலும் சாப்பிட தோணுதா? அப்போ உங்களுக்கு இதுதான் பிரச்சனை!
Food Noise: வயிறு முட்ட சாப்பிட்ட பிறகும் பிரியாணி, பர்கர் சாப்பிட வேண்டும் என மனசு அலைபாயுதா? இந்த மாதிரி தேவையில்லாமல் சாப்பிட தூண்டும் உணர்வை நிபுணர்கள் 'ஃபுட் நாய்ஸ்' என்று அழைக்கிறார்கள். இதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.

வயிறு ஃபுல்லா இருந்தாலும் சாப்பிட தோணுதா?
மதியம் வயிறு முட்ட சாப்பிட்டிருந்தாலும், மாலை நேரமாகும் போது சிப்ஸ் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று மனம் தோன்றும். பசியே இருக்காது; ஆனால், உணவைப் பற்றிய நினைவாகவே இருக்கும். இந்த உணவிற்குக் பெயர்தான் 'ஃபுட் நாய்ஸ்' (Food Noise).
இதனைப் பார்த்து பலரும் இது பெருந்தீனிப் பழக்கம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு பின்னால் மனநல மற்றும் ஹார்மோன் சார்ந்த காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த 'ஃபுட் நாய்ஸ்' ஏன் வருகிறது?
முதல் காரணம் ஹார்மோன். நமது உடம்பில் 'க்ரெலின்' என்ற ஹார்மோன் உள்ளது. இதுதான் பசியைத் தூண்டும். மன அழுத்தம், தூக்கமின்மை அல்லது நேரத்திற்குச் சாப்பிடாத காரணத்தினால் இந்த ஹார்மோன் சமநிலை தவறும். அப்போது வயிறு நிறைந்திருந்தாலும், மூளைக்குப் பசிக்கிறது என்று சிக்னல் செல்லும்.
இரண்டாவது முக்கிய காரணம் மன அழுத்தம் மற்றும் சலிப்பு. நாம் அழுத்தமாக இருக்கும்போதோ, சலிப்பாக உணரும்போதோ அல்லது சோகமாக இருக்கும்போதோ நமது மூளை 'டோபமைன்' (Dopamine) ஹார்மோனைத் தேடும். சுவையான உணவிலிருந்து இந்த டோபமைன் மிகவும் எளிதாகக் கிடைக்கும். அதனால்தான் மனநிலை சரியில்லாதபோது நாம் அறியாமலேயே சாப்பிட ஆரம்பித்துவிடுகிறோம். இதனை 'எமோஷனல் ஈட்டிங்' என்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களும் காரணம்
மூன்றாவது காரணம் சமூக வலைத்தளங்கள். நாள் முழுவதும் மொபைலில் பிரியாணி, கேக், துரித உணவு வீடியோக்களைப் பார்க்கும்போது நமது மூளைக்குள் அவற்றைச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் உருவாகும். கண்கள் பார்க்கும், மூளை சாப்பிடக் கேட்கும். இதையே 'ஃபுட் நாய்ஸ்' என்கின்றனர். இந்த ஃபுட் நாய்ஸைக் குறைக்க வேண்டுமென்றால், முதலில் அது நிஜமான பசியா அல்லது மனதின் பசியா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையான பசி எடுத்தால் எந்த உணவு கொடுத்தாலும் சாப்பிடத் தோன்றும். ஆனால், 'ஃபுட் நாய்ஸ்' இருந்தால் குறிப்பிட்ட ஏதாவது ஒரு சுவையான உணவை மட்டும்தான் சாப்பிடத் தோன்றும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அல்ட்ரா-பிராசஸ்டு உணவுகள்
நவீன கால வாழ்க்கை முறையில் 'ஃபுட் நாய்ஸ்' அதிகரிப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணம், நாம் உண்ணும் அல்ட்ரா-பிராசஸ்டு உணவுகள் ஆகும். அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் கெட்ட கொழுப்புகள் சேர்க்கப்பட்ட இந்த வகையான உணவுகள், நமது மூளையின் இயற்கையான பசி மற்றும் திருப்தி மையங்களை முழுமையாகத் திசைதிருப்புகின்றன.
வயிறு நிரம்பிவிட்டதாக மூளைக்குச் செல்லும் சிக்னல்களை இந்த உணவுகள் மழுங்கடிப்பதால், எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் எதையாவது கொறிக்க வேண்டும் என்ற நரம்பியல் தூண்டுதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து நார்ச்சத்து நிறைந்த முழுமையான உணவுகளை உட்கொள்வது இந்த உணவுக்கொல்லியை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும்.
இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட நல்ல தூக்கம், நேரத்திற்குச் சாப்பிடுதல், நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை மிகவும் அவசியமாகும். உணவு பற்றிய நினைவு வந்தவுடன் உடனே சாப்பிடாமல் ஒரு பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துப் பார்த்தால், இந்த 'ஃபுட் நாய்ஸ்' தானாகவே குறைந்துவிடும்.

