- Home
- உடல்நலம்
- உணவு
- Corn Idli : சோள இட்லி சாப்பிட்டிருக்கீங்களா? வாழை இலையின் மணத்துடன் அசத்தும் வித்தியாசமான சுவை!
Corn Idli : சோள இட்லி சாப்பிட்டிருக்கீங்களா? வாழை இலையின் மணத்துடன் அசத்தும் வித்தியாசமான சுவை!
Corn Idli : வழக்கமான இட்லிக்குப் பதிலாக வித்தியாசமான காலை உணவை செய்ய விரும்புகிறீர்களா? சோளம், ரவை, தயிர், நெய் தாளிப்பு சேர்த்து வாழை இலையில் ஆவியில் வேகவைக்கும் சுவையான சோள இட்லியை வீட்டிலேயே எளிதாகச் செய்வது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

சோள இட்லி
காலையில் வழக்கமாக இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? புதுவிதமான, சுவையான காலை உணவைத் தயாரிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த சோள இட்லி உங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.
இனிப்புச் சுவை கொண்ட சோளம், மொறுமொறுப்பான முந்திரி, மணம் தரும் நெய் தாளிப்பு என ஒவ்வொரு பொருளும் சேரும்போது இட்லியின் சுவையே தனியாக இருக்கும்.
அரிசி இட்லிக்கு மாற்றாக வித்தியாசமான உணவை முயற்சி செய்ய நினைப்பவர்களும், குழந்தைகளுக்கு புதுவிதமான காலை உணவு கொடுக்க விரும்புபவர்களும் இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
வாழை இலையில் மடித்து ஆவியில் வேகவைப்பதால் கூடுதல் மணமும் கிடைக்கும். வாருங்கள், சுவையான சோள இட்லியை எளிய முறையில் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
சோள இட்லி செய்யத் தேவையான பொருட்கள்
சோளம் - 1 கப்
ரவை - 1 கப்
தயிர் - 1\2 கப்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
இஞ்சி - 1 சிறிய துண்டு
துருவிய கேரட் - 1\4 கப் (விருப்பப்பட்டால்)
நெய் - 1 முதல் 2 டீஸ்பூன்
கடுகு - 1\2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
முந்திரி, பாதாம் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோள இட்லி செய்வது எப்படி?
சோளத்தை அரைத்தல்
சோளக் கதிர்களை உறித்து, அதில் உள்ள சோள மணிகளைத் தனியாக எடுத்துக்கொள்ளவும். அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதிகமாகத் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
ரவையை வறுத்தல்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ரவையைச் சேர்த்து மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் அதைத் தனியாக எடுத்து ஆறவிடவும்.
இட்லி மாவு தயாரித்தல்
வறுத்த ரவையுடன் அரைத்த சோளக் கலவையைச் சேர்க்கவும். பின்னர் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். விருப்பப்பட்டால் துருவிய கேரட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தாளிப்பு சேர்த்தல்
மற்றொரு சிறிய கடாயில் நெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து தாளிக்கவும். இந்தத் தாளிப்பை இட்லி மாவில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
வாழை இலையில் மடித்தல்
வாழை இலையைச் சுத்தமாகக் கழுவி, தேவையான அளவில் வெட்டிக்கொள்ளவும். இலை கிழியாமல் மடிக்க வசதியாக லேசாகச் சூடாக்கலாம். தயாரித்த மாவை இலையின் நடுவில் வைத்து, ஓரங்கள் திறக்காதபடி மடித்துக்கொள்ளவும்.
ஆவியில் வேகவைத்தல்
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதன் உள்ளே இட்லித் தட்டில் வாழை இலையில் மடித்து வைத்துள்ள மாவை அடுக்கவும். மூடி வைத்து சுமார் 10 -15 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். மாவின் அளவு மற்றும் பதத்தைப் பொறுத்து நேரம் மாறலாம். உள்ளே நன்றாக வெந்துள்ளதா என்பதைச் சரிபார்த்து இறக்கவும்.
சோள இட்லியுடன் என்ன சாப்பிடலாம்?
சோள இட்லியைத் தேங்காய் சட்னி, காரச் சட்னி, புதினா சட்னி அல்லது சாம்பலுடன் பரிமாறலாம். நெய், முந்திரி, பாதாம் சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும். சோளத்தின் இயல்பான சுவையும் வாழை இலையின் மணமும் சேர்ந்து இந்த உணவை வித்தியாசமான காலை உணவாக மாற்றும். சாதாரண இட்லிக்குப் பதிலாக ஒரு புதிய சுவையை முயற்சி செய்ய நினைத்தால், இந்தச் சோள இட்லியை வீட்டில் செய்து பாருங்கள்.
சுவையான சோள இட்லிக்கான முக்கிய குறிப்புகள்
- மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கலாம். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.
- மென்மையான இட்லிக்கு மாவைக் கலந்த பிறகு 10-15 நிமிடங்கள் ஊறவிட்டால் ரவை ஈரத்தை உறிஞ்சி நல்ல பதத்திற்கு வரும்.
- கூடுதல் சுவைக்கு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத்தூள் அல்லது சீரகத்தைச் சிறிதளவு சேர்க்கலாம்.
- வாழை இலை இல்லையென்றால் எண்ணெய் தடவிய சிறிய கிண்ணங்கள் அல்லது இட்லித் தட்டுகளிலும் மாவை ஊற்றி வேகவைக்கலாம்.
- 10 நிமிடங்களில் வெந்துவிடலாம். ல் மாவின் தடிமன் மற்றும் அளவைப் பொறுத்து கூடுதல் நேரம் தேவைப்படலாம்.

