- Home
- உடல்நலம்
- உணவு
- Hair growth biryani: முடி நீளமா வளரணுமா? அப்போ பிள்ளைங்க லஞ்ச் பாக்ஸில் இதை சேருங்க!
Hair growth biryani: முடி நீளமா வளரணுமா? அப்போ பிள்ளைங்க லஞ்ச் பாக்ஸில் இதை சேருங்க!
Hair growth biryani: குழந்தைகளின் கூந்தல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உகந்த, சுவையான மற்றும் சத்தான கறிவேப்பிலை பிரியாணி ரெசிபி லஞ்ச்க்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கருவேப்பிலை பிரியாணி
குழந்தைகள் சாப்பிடும்போது கறிவேப்பிலையை மட்டும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுவது எல்லா வீடுகளிலும் நடக்கும் ஒன்றுதான். ஆனால், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை குழந்தைகளின் கூந்தல் வளர்ச்சிக்கும், கண்பார்வைக்கும் மிகவும் அவசியம். அதை அவர்கள் ஒதுக்காமல் விரும்பிச் சாப்பிட வைக்க, கறிவேப்பிலையை அரைத்து மணமணக்கும் கறிவேப்பிலை பிரியாணியாக செய்து கொடுங்கள். காய்கறிகளும் சேர்வதால், இது சத்தான மற்றும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு:
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
புதினா இலைகள் – 1 கைப்பிடி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10 பல்
தாளிப்பதற்கு மற்றும் வதக்குவதற்கு:
நெய் – 1 ஸ்பூன்
சமையல் எண்ணெய்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1 அல்லது 2
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
கெட்டித் தயிர் – ½ கப்
பிரியாணி செய்வதற்கு:
சீரக சம்பா அரிசி – 1 டம்ளர்
கேரட் – 2
வேகவைத்த பச்சைப் பட்டாணி
தண்ணீர் – 1½ டம்ளர்
உப்பு
படி 1
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, ஒரு கைப்பிடி புதினா மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருட்களைச் சேர்த்து பொரிய விடவும்.
படி 2
நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தொடர்ந்து தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கியதும், அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் ½ கப் கெட்டித் தயிர் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும். மசாலாவில் எண்ணெய் பிரிந்ததும், நறுக்கிய கேரட் மற்றும் வேகவைத்த பச்சைப் பட்டாணியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
படி 3
ஒரு டம்ளர் அரிசிக்கு 1½ டம்ளர் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்த சீரக சம்பா அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும். குக்கரை மூடி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சரியாக 10 நிமிடங்கள் தம் போட்டு இறக்கவும். ஆரோக்கியமான, மணமணக்கும் கறிவேப்பிலை பிரியாணி தயார். இதற்குத் தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி அல்லது உருளைக்கிழங்கு வறுவல் வைத்து பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்.















