- Home
- உடல்நலம்
- உணவு
- Crab Omelette : நண்டை நோண்டி ஆம்லெட் போடுவோமா? சுவையான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?
Crab Omelette : நண்டை நோண்டி ஆம்லெட் போடுவோமா? சுவையான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி?
Crab Omelette: நண்டு ஆம்லெட் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், நண்டைச் சுத்தம் செய்வது முதல் சுவையான ஆம்லெட் தயாரிப்பது வரை முழுமையான செய்முறையை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

நண்டு ஆம்லெட் செய்வது எப்படி
வழக்கமாக முட்டை ஆம்லெட், வெங்காய ஆம்லெட் எனச் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், நண்டின் சதையை உதிர்த்து, மசாலாப் பொருட்களுடன் முட்டையில் கலந்து ஆம்லெட் போட்டால் எப்படி இருக்கும்? கடல் உணவுப் பிரியர்களுக்கு நிச்சயம் இது ஒரு சூப்பரான டேஸ்ட்.
நண்டு ஆம்லெட் என்ற பெயரைக் கேட்டதுமே ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி, “நண்டை நோண்டி ஆம்லெட் போடுவோம்” என்று சொன்ன வசனம் பலருக்கும் நினைவுக்கு வரலாம். அந்த அளவுக்கு வித்தியாசமான இந்த உணவை வீட்டிலேயே எளிமையாகச் செய்து அசத்தலாம்.
நண்டின் சுவை, மிளகின் காரம், சின்ன வெங்காயத்தின் மணம் என அனைத்தும் சேர்ந்து சாப்பிடத் தூண்டும் இந்த நண்டு ஆம்லெட்டை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
நண்டு ஆம்லெட் செய்யத் தேவையான பொருட்கள்
- நண்டு - 2 முதல் 3
- முட்டை - 2
- சின்ன வெங்காயம் - 10
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி - 1 சிறியது
- கொத்தமல்லித் தழை - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மஞ்சள்தூள் - 1\4 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1\2 தேக்கரண்டி
- சீரகத்தூள் - 1\4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
நண்டு ஆம்லெட் செய்முறை - படி 1
நண்டைச் சுத்தம் செய்து வேகவைக்கவும்
முதலில் நண்டை நன்றாகச் சுத்தம் செய்து, ஆவியில் சுமார் 5 நிமிடங்கள் வேகவைக்கவும். நண்டு முழுமையாக வெந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். வேகவைத்த நண்டு ஆறியதும், ஓட்டிலிருந்து சதையை மட்டும் கவனமாக எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். ஓட்டின் சிறு துண்டுகள் கலந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
படி 2
ஆம்லெட் கலவையைத் தயாரிக்கவும்
ஒரு பாத்திரத்தில் நண்டின் சதை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் முட்டைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
படி 3
ஆம்லெட்டைச் சுட்டு எடுக்கவும்
சுத்தமான, உடையாத நண்டு ஓட்டில் தயாரித்த கலவையை நிரப்ப்லாம். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நண்டை ஓட்டுடன் எடுத்து வைத்கவும். மிதமான தீயில் ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும்.
படி 4
ஓடு பயன்படுத்த விரும்பவில்லை என்றால் வழக்கம்போல் நேரடியாகத் தோசைக்கல்லில் ஆம்லெட் போடலாம்.
சுவையான நண்டு ஆம்லெட் தயார்
அவ்வளவுதான் காரசாரமான, மணமான நண்டு ஆம்லெட் தயார். சூடான சாதம், ரசம் சாதம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் இதைச் சாப்பிடலாம். மிளகின் காரமும் நண்டின் தனித்துவமான சுவையும் சேர்ந்து இந்த ஆம்லெட்டுக்கு கூடுதல் ருசியைக் கொடுக்கும்.
நண்டு ஆம்லெட் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
நண்டை நன்றாகச் சுத்தம் செய்யவும்: ஓட்டின் அழுக்கு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிடவும்.
முழுமையாக வேகவைக்கவும்: 5 நிமிடங்கள் என்பது தொடக்க நேரம் மட்டுமே. நண்டின் அளவு மற்றும் வேகும் முறைக்கு ஏற்ப கூடுதல் நேரம் தேவைப்படலாம்.
மசாலாவை உங்கள் விருப்பப்படி மாற்றலாம்: காரம் அதிகம் வேண்டுமென்றால் மிளகுத்தூள் அல்லது பச்சை மிளகாயைக் கூட்டலாம்.
ஓட்டைப் பயன்படுத்தும்போது கவனம்: கூர்மையான ஓட்டுத் துண்டுகள் இல்லாத சுத்தமான ஓட்டை மட்டும் பயன்படுத்தவும். ஓட்டில் சுடுவதற்குப் பதிலாக தோசைக்கல்லில் ஆம்லெட் போடுவது எளிமையான வழி.

