Baking Soda: பேக்கிங் சோடா vs பேக்கிங் பவுடர்: ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
Baking Soda Vs Baking Powder : பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ரெண்டுமே சமையலுக்குப் பயன்படுத்துற பொருள்தான். ஆனா, பலருக்கும் எதுக்கு எதை யூஸ் பண்ணணும்னு குழப்பம் இருக்கு. வாங்க, ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி பார்க்கலாம்.

Baking Soda Vs Baking Powder
சமையல் மற்றும் பேக்கிங் செய்யும்போது அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டு பொருட்கள் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர். தோற்றத்தில் இரண்டும் வெள்ளை நிறப் பொடியாக இருப்பதால், பலர் இவை இரண்டும் ஒன்றே என்று நினைத்து தவறாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை இரண்டின் செயல்பாடும், பயன்படுத்தும் முறையும் முற்றிலும் வேறுபட்டவை.
பேக்கிங் சோடாவும் பேக்கிங் பவுடரும் ஒரே மாதிரி தோன்றினாலும், அவற்றின் பயன்பாடு வெவ்வேறானது. சரியான உணவுக்கு சரியான பொருளை, சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே கேக், பக்கோடா உள்ளிட்ட உணவுகள் சுவையாகவும், மென்மையாகவும், எதிர்பார்த்த தரத்திலும் கிடைக்கும். சமையலில் சிறிய அளவு மாற்றமே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.
பேக்கிங் சோடா என்றால் என்ன?
பேக்கிங் சோடா என்பது சோடியம் பைகார்பனேட் என்ற காரத்தன்மை கொண்ட பொருள். இது தனியாக செயல்படாது. தயிர், மோர், எலுமிச்சைச் சாறு, வினிகர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களுடன் சேரும்போது வேதியியல் வினை ஏற்பட்டு கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. இதனால் மாவு விரைவாக உப்பி மென்மையாக மாறுகிறது. பக்கோடா அல்லது சில வகை கேக்குகள் போன்றவற்றில் இதை பயன்படுத்தியவுடன் உடனே சமைப்பது நல்லது. நீண்ட நேரம் வைத்தால் அதன் செயல்திறன் குறைந்து விடும். மேலும், அளவுக்கு அதிகமாக சேர்த்தால் உணவில் கசப்பான சுவை ஏற்படும்.
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்தால் 'இத்தனை' பிரச்சினை தீருமா?
பேக்கிங் பவுடர் என்றால் என்ன?
பேக்கிங் பவுடரில் பேக்கிங் சோடாவுடன் அமிலத்தன்மை கொண்ட பொருட்களும் ஏற்கனவே கலந்திருக்கின்றன. அதனால், இதைப் பயன்படுத்தும்போது கூடுதலாக எலுமிச்சைச் சாறு அல்லது தயிர் போன்றவற்றை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது மெதுவாகவும் சீராகவும் செயல்படுவதால் கேக், மஃபின் போன்ற பேக்கரி உணவுகள் நன்றாக உப்பி மென்மையாக வர உதவுகிறது. சிறிய அளவு கூடுதலாக சேர்த்தாலும் சுவையில் பெரிய மாற்றம் ஏற்படாது.
தயிர் அல்லது முட்டை சேர்க்காமல் கேக் தயாரிக்கும் போது, சில சமையல் குறிப்புகளில் பேக்கிங் சோடாவும் பேக்கிங் பவுடரும் இணைந்து பயன்படுத்தப்படுகின்றன.
ஒன்றுக்கு பதிலாக மற்றொன்றை பயன்படுத்தலாமா?
தேவைப்பட்டால் பேக்கிங் சோடாவுக்குப் பதிலாக பேக்கிங் பவுடரை பயன்படுத்தலாம். ஆனால், அதற்கு பொதுவாக 2 முதல் 3 மடங்கு அதிக அளவு தேவைப்படும். அதேபோல், பேக்கிங் பவுடருக்குப் பதிலாக பேக்கிங் சோடாவை பயன்படுத்த வேண்டுமெனில், அதனுடன் தயிர், வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருளை சேர்க்க வேண்டும். இல்லையெனில் உணவு சரியாக உப்பாது.
இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருங்கள்
சமையலில் சரியான அளவு பயன்படுத்தாதபோது சில அறிகுறிகள் தென்படும். கேக் கசப்பாக இருந்தால் பேக்கிங் சோடா அதிகமாக சேர்ந்திருக்கலாம். கேக் சரியாக உப்பவில்லை என்றால் பேக்கிங் பவுடர் பழையதாக இருக்கலாம் அல்லது அளவு போதாமல் இருக்கலாம். கேக்கின் வெளிப்புறம் மட்டும் அதிகமாக பழுப்பு நிறமாகி, உள்ளே சரியாக வெந்திருக்கவில்லை என்றால் பேக்கிங் சோடா அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பக்கோடா அதிக எண்ணெயை உறிஞ்சினால், பேக்கிங் சோடா தேவைக்கு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

