1000 days - No sugar: 1000 நாட்கள் no சுகர்... ஆய்வு சொல்வது என்ன?
1000 days - No sugar: பிறந்த முதல் 1,000 நாட்களுக்குச் சர்க்கரையைத் தவிர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் புற்றுநோய் அபாயத்தை 69% வரை குறைத்து ஆரோக்கியமான நீண்ட ஆயுளைப் பெற முடியும் என ஆய்வு கூறுகிறது.

குழந்தைகளுக்கு 1000 நாட்கள் no சுகர்
குழந்தைகள் பிறந்த முதல் 1,000 நாட்களுக்குச் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம், எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'யுகே பயோபேங்க்' (UK Biobank) என்ற அமைப்பின் மூலமாக சுமார் 64,761 முதியவர்களிடம் இந்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டமான முதல் 1,000 நாட்களில், அதாவது கருவுற்ற காலம் முதல் குழந்தை பிறந்து இரண்டு வயது வரை அவர்களின் உணவுப் பழக்கத்தில் சர்க்கரையின் தாக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது.
ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கிய முடிவுகள்:
நீண்டகால ஆரோக்கிய உணவுப் பழக்கம்: வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் சர்க்கரை உட்கொள்ளாமல் வளர்ந்தவர்கள், வளர்ந்த பிறகும் குறைவான அளவிலேயே சர்க்கரையைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, 50 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அவர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையே தொடர்ந்து கடைப்பிடிப்பது தெரியவந்துள்ளது.
புற்றுநோய் அபாயம் குறைவு: ஆரம்பக் காலத்தில் சர்க்கரையைத் தவிர்த்தவர்களுக்குக் கல்லீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்படுவதற்கான அபாயம் 36 சதவீதம் முதல் 69 சதவீதம் வரை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முதுமை வேகம் குறைதல்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது புற்றுநோயைத் தடுப்பது மட்டுமல்லாமல், உடல் விரைவில் முதுமையடையும் வேகத்தையும் குறைக்க உதவுகிறது.
சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகள்
குழந்தைப் பருவத்தில் தொடர்ந்து சர்க்கரையை உட்கொள்வது உடலில் நாள்பட்ட உள்வீக்கத்தை (Chronic Inflammation) உருவாக்குகிறது. மேலும், இது உடலில் உள்ள செல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அழுத்தத்திற்கு வழிவகுத்து, பிற்காலத்தில் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணமாக அமைகிறது.
மருத்துவர்களின் அறிவுரை
குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அடித்தளமிட, பெற்றோர்கள் ஆரம்பக் காலத்திலிருந்தே செயற்கை மற்றும் ஆரோக்கியமற்ற சர்க்கரை உணவுகளைத் தவிர்த்து, இயற்கையான சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.











