- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Wet Hair: ஈரத்தலையோடு தூங்குற பழக்கம் இருக்கா? உஷார்! முடிக்கு மட்டுமல்ல; தலைக்கும் ஆபத்து!
Wet Hair: ஈரத்தலையோடு தூங்குற பழக்கம் இருக்கா? உஷார்! முடிக்கு மட்டுமல்ல; தலைக்கும் ஆபத்து!
Wet Hair: நீங்கள் குளித்து விட்டு ஈரத்தலையுடன் அப்படியே தூங்க செல்கிறீர்களா? இதனால் முடிக்கு மட்டுமின்றி தலைக்கும் பெரிய ஆபத்து இருக்கிறது. இது தொடர்பாக இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஈரத்தலையோடு தூங்கினால் என்ன ஆகும்?
இரவு நேரத்தில் தலைக்கு குளித்துவிட்டு, முடி சரியாகக் காயும் முன்பே தூங்கப் போகும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. "ஈரத்தலையோடு தூங்கினால் அடுத்த நாள் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும்" என்று பெரியவர்கள் சொல்வதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஈரமான முடியால் நேரடியாக சளியோ காய்ச்சலோ வரும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இருப்பினும், தலைக்கு குளித்த பிறகு முடியைக் காயவைக்காமல் தூங்குவது முடிக்கும் மண்டை ஓட்டுக்கும் நல்லது கிடையாது.
முடி சுலபமாக உடைய வாய்ப்பு
அப்படியானால் ஈரத்தலையோடு தூங்கினால் என்னதான் நடக்கும்? இதற்கு முதல் காரணம் முடியின் தன்மைதான். முடி ஈரமாக இருக்கும்போது அதன் வேர்கள் வழக்கத்தைவிட மிகவும் பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில் முடியைச் சீவுவது, இழுப்பது அல்லது அதிகமாகத் தேய்ப்பது போன்ற காரணங்களால் முடி சுலபமாக உடைய வாய்ப்புள்ளது.
இரவு தூங்கும்போது நாம் படுக்கையில் அங்கும் இங்கும் திரும்புவது இயல்பு. இந்த நேரத்தில் ஈரமான முடி தலையணையில் அடிக்கடி உரசும். முடி ஏற்கனவே பலவீனமாக இருப்பதால், இந்தத் தொடர்ச்சியான உரசலால் முடி உடையலாம் அல்லது நுனி பிளக்கலாம். குறிப்பு நீளமான முடி அல்லது சுலபமாக உடையக்கூடிய முடி இருக்கிறவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மண்டை ஓட்டிலும் பாதிப்பு
முடியைத் தாண்டி மண்டை ஓட்டிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். முடியும் மண்டை ஓடும் ரொம்ப நேரம் ஈரமாக இருந்தால், அங்கு ஈரப்பதம் அதிகமான ஒரு சூழல் உருவாகும். இந்த நிலைமை சில பாக்டீரியாக்களும் ஈஸ்ட்களும் வளர வசதியாக அமைந்திடும். இதனால் சிலருக்குப் பொடுகு அல்லது மண்டை ஓட்டில் எரிச்சல் மாதிரியான பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரு நாள் இரவு ஈரத்தலையோடு தூங்கினால் கண்டிப்பாகத் தொற்று ஏற்படும் என்று இதற்கு அர்த்தம் கிடையாது.
ஈர முடியை இறுக்கமாகக் கட்டுவது
இதோடு சேர்த்து நாம் செய்யும் இன்னொரு சாதாரண தவறு என்னவென்றால், ஈர முடியை இறுக்கமாகக் கட்டிக்கொண்டே தூங்குவது. சிலர் தலைக்கு குளித்த பிறகு முடியை இறுக்கமாகப் பின்னல் போடுவார்கள், கொண்டை போடுவார்கள் அல்லது இரப்பர் பேண்ட் போட்டு கட்டுவார்கள். முடி ஈரமாக இருக்கும்போதே இப்படி இறுக்கமாகக் கட்டுவதால் முடியில் அதிக இழுவை ஏற்படும். இதனால் முடி உடைய வாய்ப்பு இன்னும் அதிகமாகும்.
முடியை எப்படி சரியாக காயவைப்பது?
துண்டால் முடியை வேகமாகத் தேய்ப்பதற்குப் பதிலாக, மெதுவாக ஒத்தெடுத்துத் தண்ணீரை உறிஞ்சுவது நல்லது. முடிந்தவரை முடியை இயற்கையாகவே காயவிடலாம். உடனே காயவைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் ஹேர் டிரையர் பயன்படுத்தலாம். ஆனால், மிகவும் சூடான காற்றை நேரடியாக முடியில் காட்டுவதற்குக் பதிலாக, குறைவான சூடு அல்லது குளிர்ந்த காற்றைப் பயன்படுத்துவதுதான் சரி. அதிக சூடு முடியின் தரத்தைக் கெடுத்துவிடும்.
அதனால் "ஈரத்தலையோடு தூங்கினால் சளி பிடிக்கும்" என்கிற நம்பிக்கையை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் முடி ஈரமாக இருக்கும்போது அது மிகவும் பலவீனமாக மாறுவதால், தலையணை உரசல், இறுக்கமாகக் கட்டுவது, அதிக நேரம் ஈரமாக இருப்பது இவை அனைத்தும் முடிக்கும் மண்டை ஓட்டுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
எனவே, இரவில் தலைக்குப் குளிக்கும் பழக்கம் இருந்தால், தூங்குவதற்கு முன்பு முடியை முடிந்தவரை நன்றாகக் காயவைத்துவிட்டுப் படுக்கைக்குச் செல்வது நல்லது. இந்தச் சிறிய முன்னெச்சரிக்கை உங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ரொம்பவே உதவி செய்யும்.

