ஒரு HIT கூட இல்ல.. பிப்ரவரியில் ஜீரோவான தமிழ் சினிமா! ஒரே வாரத்தில் 3 ஹிட்; மலையாள சினிமாவின் அடிபொலி சம்பவம்
பிப்ரவரி மாதம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஒன்று கூட ஹிட் ஆகாத நிலையில், மறுபுறம் மலையாள திரையுலகம் ஒரே வாரத்தில் மூன்று ஹிட் படங்களை கொடுத்து அசத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு 2024-ம் ஆண்டு பெரியளவில் வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் போன்ற படங்கள் ரிலீஸ் ஆனாலும், அப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை. மறுபுறம் இதற்கு போட்டியாக வெளிவந்த அருண் விஜய்யின் மிஷன் படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், புரமோஷன் சரிவர செய்யாததால் அப்படமும் பெரியளவில் ஹிட் ஆகவில்லை.
இதற்கு அடுத்தபடியாக குடியரசு தின விடுமுறையில் ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன், பா.இரஞ்சித் தயாரித்த ப்ளூ ஸ்டார் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் ப்ளூ ஸ்டார் படம் மட்டுமே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வசூலிலும் முன்னிலை வகித்தது. மறுபுறம் சிங்கப்பூர் சலூன் சுமாரான வரவேற்பை பெற்றாலும், அதற்கு சக்சஸ் மீட் நடத்தி வெற்றிபெற்றதாக அறிவித்தனர். ஜனவரி நிலைமை இப்படி சென்றதால் பிப்ரவரி மீது அனைவரின் கவனமும் இருந்தது.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் மலையாள படத்துக்கு ஏற்பட்ட டிமாண்ட்.. மாஸ் காட்டும் மஞ்சுமெல் பாய்ஸ் - அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?
அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரத்தில் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படம் செம்ம காமெடியாக இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் எதிர்பார்த்த அளவு பெர்பார்ம் செய்யவில்லை. இதையடுத்து பிப்ரவரியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்றான லால் சலாம் ரிலீஸ் ஆனது. ரஜினி நடித்திருந்ததால் இப்படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக ஆனது. ரஜினியே நடித்தாலும் கண்டெண்ட் கிளிக் ஆனால் தான் படத்துக்கு வசூல் வரும் என்பதை உணர்த்திவிட்டு சென்றது லால் சலாம்.
siren
லால் சலாமின் வரவால் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த லவ்வர் திரைப்படத்துக்கு போதிய அளவில் தியேட்டர்கள் கிடைக்காமல் போனது. இப்படம் நஷ்டமின்றி தப்பித்தாலும் ஹிட் பட்டியலில் இணையவில்லை. இதையடுத்து ஜெயம் ரவி நடித்த சைரன் படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கும் சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது. பின்னர் கடந்த வாரம் வெளிவந்த சிறு பட்ஜெட் படங்களுக்கும் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் வராததால் பிப்ரவரியில் தமிழ் சினிமாவின் நிலவரம் ஜீரோவாக உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் அக்கட தேசமான கேரளாவுக்கு பிப்ரவரி மாதம் ஒரு பொன்னான மாதமாக மாறி இருக்கிறது. இதற்கு காரணம் பிரேமாலு, பிரம்மயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் ஆகிய மூன்று படங்கள் தான். சுமார் ஒரு வார இடைவெளியில் வெளிவந்த இந்த மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகின்றன. பிரேமாலு, பிரம்மயுகம் ஆகிய படங்கள் ஒரே வாரத்தில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், கடந்த வாரம் வெளிவந்த மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூன்று தினங்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன்மூலம் பிப்ரவரி மாதத்தில் கோலிவுட்டை ஓவர்டேக் செய்துள்ளது மலையாள சினிமா.
இதையும் படியுங்கள்... இறுதி கட்ட பணியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்!