சினிமா பாணியில் சென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயப்பாக்கம் டிஎன்எச்பி குடியிருப்பில் வசித்து வருபவர் சரண் என்ற பச்சைக்கிளி(23). ரவுடி மற்றும் கஞ்சா வியாபாரியான இவர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு ஒன்று சம்பந்தமாக சரண் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்பு தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரண் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு உயிர் பயத்தில் ஓடியுள்ளனர். இதில் அவரது நண்பர் தப்பி செல்ல சரணை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது.
இதையும் படிங்க;- 2 ரவுடிகளை என்கவுன்டர் செய்தது ஏன்? இவர்களுக்கு இதுதான் பொழப்பு.. காவல் ஆணையர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரவுடி சரண் சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- சென்னையில் பிரபல கூலிப்படை தலைவன் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக்கொலை.. யார் இந்த முத்து சரவணன் தெரியுமா?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக சரண் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.