Jayadevi Passed Away: இயக்குனர் வேலு பிரபாகரனின் முன்னாள் மனைவியும் - நடிகையுமான ஜெயதேவி காலமானார்!
பிரபல நடிகை ஜெயதேவி கடந்த ஒரு மாதமாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இன்று காலை உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், அறிமுகமாகும் பல நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு... தன்னுடைய சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் நிலையில், தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டும் இன்றி, சில படங்களை தயாரித்தும், இயக்கியும் பிரபலமானவர் ஜெயதேவி.
ஜெயதேவி தன்னுடைய 20 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கினார். இதயமலர், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், நலம் நலமறிய ஆவல், விலாங்கு மீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், பவர் ஆஃப் வுமன் உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளதோடு பல படங்களை தயாரித்தும் உள்ளார்.
ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், மற்றும் வேலு பிரபாகரன் ஆகியோரை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமையும் ஜெயதேவியை தான் சேரும். பின்னர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான வேலு பிரபாகரனை காதலித்து கரம் பிடித்தார். திருமணமான சில வருடங்கள் கழித்து, வேலுபிரபாகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் வேலு பிரபாகரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், ஜெயதேவி பல வருடங்களாக அபார்ட்மெண்ட் ஒன்றில் தனிமையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு பிள்ளைகள் இல்லாததால், ஜெயதேவியை நேதாஜி என்பவர் தான் உடன் இருந்து கவனித்து வந்தார். அதே போல் முரளி என்பவற்றின் வீட்டில் தான் ஜெயதேவி பல வருடங்களாக மிகவும் குறைவான வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அவ்வப்போது உறவினர்கள் இவரை வந்து பார்த்து நலம் விசாரித்து சென்றாலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, 5 ஸ்டார் கதிரேசன் போன்றார்... ஜெயதேவியின் மருத்துவ செலவு உள்ளிட்ட அனைத்தையும் கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இதயம் கோளாறு மற்றும் வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயதேவி, சில தினங்களுக்கு முன்பு தான், டிஸ்சார்ஜ் ஆனதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இன்று காலை 4:30 மணியளவில் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் வயது 65. தற்போது இவருடைய உடல், போரூரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இவரின் இறுதி சடங்குகள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயதேவியின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D