- Home
- Sports
- Fifa World Cup
- FIFA : ஹைட்டியை வீழ்த்தி குரூப்பில் முதலிடம் பிடித்த பிரேசில்; ஆஸ்திரேலியாவை அசால்ட்டாக வீழ்த்திய அமெரிக்கா
FIFA : ஹைட்டியை வீழ்த்தி குரூப்பில் முதலிடம் பிடித்த பிரேசில்; ஆஸ்திரேலியாவை அசால்ட்டாக வீழ்த்திய அமெரிக்கா
FIFA Worldcup 2026 : கால்பந்து உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா - ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் - ஹைட்டி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியின் ரிசல்ட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Brazil vs Haiti
FIFA உலகக் கோப்பையில் ஹைட்டி அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது. மத்தியூஸ் குன்ஹா இரண்டு கோல்களும், வினிசியஸ் ஜூனியர் ஒரு கோலும் அடிக்க, 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி வாகை சூடியது. போட்டியின் முதல் பாதியிலேயே மூன்று கோல்களும் அடிக்கப்பட்டன. அதன்பிறகு, இறுதி வரை தங்களது வலுவான தடுப்பாட்டத்தின் மூலம் இந்த முன்னிலையை லத்தீன் அமெரிக்க அணியான பிரேசில் தக்கவைத்துக் கொண்டது.
தங்களது முதல் போட்டியில் மொராக்கோவுடன் டிரா செய்திருந்த ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணிக்கு இந்த வெற்றி பெரும் ஆறுதலைக் கொடுத்துள்ளது. காயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக ஓய்வில் இருக்கும் சூப்பர் ஸ்டார் நெய்மர் இல்லாமல் தான் பிரேசில் இந்த போட்டியில் களமிறங்கியது. மறுபுறம், ஹைட்டி அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்திடம் தோற்றிருந்தாலும், தங்களது வேகமான ஆட்டத்தின் மூலம் பிரேசில் அணிக்கு நல்ல சவாலைக் கொடுத்தது. 1974-க்குப் பிறகு ஹைட்டி அணி உலகக் கோப்பையில் விளையாடுவது இதுவே முதல் முறை.
ரஃபின்ஹாவின் காயம்: அணிக்கு பெரும் கவலை
இந்த வெற்றியின் மத்தியிலும், பிரேசில் அணிக்கு ஒரு பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. போட்டியின் 40-வது நிமிடத்தில், பிரேசில் அணியின் முன்கள வீரர் ரஃபின்ஹாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவர் களத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. கார்லோ ஆன்சலோட்டியின் பயிற்சியின் கீழ் விளையாடும் அணியில், 29 வயதான எஃப்சி பார்சிலோனா விங்கரான ரஃபின்ஹா ஒரு முக்கிய வீரர். பிரேசில் அணியின் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 18 போட்டிகளில் 13-ல் விளையாடிய அவர், அணி அடித்த 24 கோல்களில் 5 கோல்களை அடித்து அசத்தியிருந்தார்.
ஹைட்டிக்கு எதிரான 3-0 வெற்றியின் மூலம், கோல் சராசரி அடிப்படையில் பிரேசில் 'சி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டு போட்டிகளில் இருந்து அணிக்கு நான்கு புள்ளிகள் கிடைத்துள்ளன. பிரேசிலின் அடுத்த போட்டி வரும் 25-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியா vs அமெரிக்கா
உலகக் கோப்பை கால்பந்து குரூப் டி போட்டியில், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. 11-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஃபோலாரின் பலோகன் நடத்திய ஒரு அட்டாக்தான் ஆஸ்திரேலியாவின் செல்ஃப் கோலுக்கு வழிவகுத்தது. இடது விங்கில் பந்துடன் வேகமாக முன்னேறிய பலோகனை, ஆஸ்திரேலிய டிஃபண்டர் கேமரூன் போர்ஜஸ் தடுக்க முயன்றார். ஆனால், பந்து அவர் காலில் பட்டு, அவர்களது சொந்த கோல் வலைக்குள் சென்றது. இந்த செல்ஃப் கோல் மூலம் அமெரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.
கோல் அடித்து சமன் செய்ய ஆஸ்திரேலியா எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. அமெரிக்க வீரர்களை தடுக்க முயன்றபோது, ஆஸ்திரேலிய டிஃபண்டர்களான ஜோர்டான் போஸ் மற்றும் அலெஸாண்ட்ரோ சிர்காட்டி ஆகிய இருவரும் மஞ்சள் அட்டை வாங்கினர்.
ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் அமெரிக்காவின் இரண்டாவது கோல் வந்தது. அன்டோனி ராபின்சன் எடுத்த கிக், செர்ஜினோ டெஸ்ட் வழியாக கோல் போஸ்ட்டுக்கு மிக அருகில் இருந்த அலெக்ஸ் ஃப்ரீமேனிடம் சென்றது. ஃப்ரீமேன் அந்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். லைன் நடுவர் உடனடியாக ஆஃப்சைடு கொடியை உயர்த்தினாலும், VAR சோதனையில் அது கோல் என உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவின் வலுவான டிஃபன்ஸை மீறி ஆஸ்திரேலியாவால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், ஆட்டம் 2-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

