- Home
- Sports
- Fifa World Cup
- FIFA : 2-0 என பின்தங்கிய பெல்ஜியம்... கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி; செனகல் அதிர்ச்சி தோல்வி!
FIFA : 2-0 என பின்தங்கிய பெல்ஜியம்... கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி; செனகல் அதிர்ச்சி தோல்வி!
FIFA World Cup : ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில், செனகல் அணிக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த பெல்ஜியம், கடைசி நேரத்தில் அபாரமாக மீண்டு வந்து 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
Belgium vs Senegal Match
அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில் நடந்த பரபரப்பான போட்டி ஒன்றில், செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் ப்ரீ-குவார்ட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றது. அட்லாண்டாவில் நடந்த ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. போட்டியின் கூடுதல் நேரத்தில் பெல்ஜியம் தனது வெற்றி கோலை அடித்தது. யூரி டைலமென்ஸ் இரட்டை கோல்களும், ரொமேலு லுகாகு ஒரு கோலும் அடித்து பெல்ஜியம் அணிக்கு வலு சேர்த்தனர். மறுபுறம், செனகல் அணிக்காக ஹபீப் டியாரா மற்றும் இஸ்மாயிலா சார் கோல் அடித்தாலும், அது அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. 2-0 என முன்னிலையில் இருந்தும் செனகல் அணி தோல்வியைத் தழுவியது.
லீடிங்கில் இருந்த செனகல்
போட்டி தொடங்கியது முதலே செனகல் அணி ஆக்ரோஷமாக விளையாடி, பெல்ஜியத்தின் தடுப்பாட்ட செனகலை திணறடித்தது. போட்டியின் 24-வது நிமிடத்தில் செனகல் தனது முதல் கோலை பதிவு செய்தது. செனகல் வீரர்கள் நடத்திய ஒரு சிறப்பான ஆட்டத்தின்போது அடிக்கப்பட்ட ஹெட்டரை, பெல்ஜியத்தின் ஸ்டார் கோல்கீப்பர் திபோ கோர்டோயிஸ் அபாரமாகத் தடுத்தார். ஆனால், பந்து நேராக அங்கேயே தயாராக நின்றுகொண்டிருந்த ஹபீப் டியாராவின் கால்களுக்குச் சென்றது. எந்தவித பதற்றமும் இல்லாமல் டியாரா பந்தை வலைக்குள் தள்ளினார். முதல் பாதியில் வேறு கோல்கள் எதுவும் விழவில்லை.
கம்பேக் கொடுத்த பெல்ஜியம்
போட்டியின் 51-வது நிமிடத்தில் செனகல் தனது முன்னிலையை 2-0 என உயர்த்தியது. செனகல் அணியின் தாக்குதல் ஆட்டத்தின் துல்லியத்தை இந்தக் கோல் வெளிச்சம் போட்டுக் காட்டியது. சூப்பர் ஸ்டார் சாடியோ மனே கொடுத்த பாஸை தனது நெஞ்சில் வாங்கிய இஸ்மாயிலா சார், நம்ப முடியாத ஒரு பவர் ஷாட் மூலம் பந்தை வலைக்குள் அனுப்பினார். பெல்ஜியம் கோல்கீப்பர் திபோ கோர்டோயிஸுக்கு பந்தைத் தடுக்க எந்த வாய்ப்பும் கொடுக்காமல், அது வலையின் மூலைக்குள் சீறிப் பாய்ந்தது. இந்தப் போட்டியில் செனகல் எளிதாக வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெல்ஜியம் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. 86-வது நிமிடத்தில் லுகாகு கோல் அடித்தார். அடுத்த மூன்று நிமிடங்களில், டைலமென்ஸ் கோல் அடித்து பெல்ஜியத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார். இதனால் போட்டி கூடுதல் நேரத்திற்குச் சென்றது. ஷூட் அவுட் வரை போட்டி செல்லுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டியை டைலமென்ஸ் கோலாக மாற்றி வெற்றியை உறுதி செய்தார்.
அடுத்தது அமெரிக்காவா, போஸ்னியாவா?
இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பையின் ப்ரீ-குவார்ட்டர் சுற்றுக்கு பெல்ஜியம் தகுதி பெற்றுள்ளது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், அமெரிக்கா மற்றும் போஸ்னியா & ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் பெல்ஜியம் மோதவுள்ளது.

