- Home
- Sports
- Fifa World Cup
- FIFA உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை... ஜெர்மனி பெனால்டியில் வெளியேறி அதிர்ச்சி!
FIFA உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை... ஜெர்மனி பெனால்டியில் வெளியேறி அதிர்ச்சி!
FIFA World Cup : ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து ஜெர்மனி அணி அதிர்ச்சிகரமாக வெளியேறியுள்ளது. ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்றது.

Germany Knocked Out
ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜெர்மனி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. இதற்கு முன்பு உலகக் கோப்பையில் நடந்த நான்கு பெனால்டி ஷூட் அவுட்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய சர்வதேச தொடரின் பெனால்டியில் ஜெர்மனி தோற்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு, 1976-ல் நடந்த UEFA யூரோப்பியன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் செக்கோஸ்லோவாகியாவிடம் 5-3 என்ற கணக்கில் தோற்றது.
தோல்வியடைந்த ஜெர்மனி
இந்தத் தோல்வி, நவீன உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஃபிஃபா தரவரிசையில் ஜெர்மனி 10-வது இடத்திலும், பராகுவே 41-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையே 31 இடங்கள் வித்தியாசம். 1994-க்குப் பிறகு, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் பெரிய தரவரிசை வித்தியாசத்தில் ஒரு அணி தோற்பது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு 2018-ல் ரஷ்யாவிடம் ஸ்பெயின் (60 இடங்கள் வித்தியாசம்), 2002-ல் தென் கொரியாவிடம் இத்தாலி (34 இடங்கள் வித்தியாசம்), அதே 2002-ல் தென் கொரியாவிடம் ஸ்பெயின் (32 இடங்கள் வித்தியாசம்) தோற்றுள்ளன.
VAR சர்ச்சை
நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, இந்த முறை சீக்கிரமாகவே நடையைக் கட்டுகிறது. VAR சர்ச்சை, தவறவிடப்பட்ட பெனால்டிகள், மற்றும் பராகுவேயின் அபாரமான தடுப்பாட்டம் என பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து, ரவுண்ட் ஆஃப் 32 சுற்றிலிருந்து ஜெர்மனியை வெளியேற்றியது பராகுவே. கிட்டத்தட்ட 120 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில், ஜெர்மனி அணி மூன்று முக்கியமான வாய்ப்புகளைத் தவறவிட்டது.
வரலாறு படைத்த பராகுவே
ஆனால், பராகுவே அணி நிதானமாகச் செயல்பட்டு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கூடுதல் நேரத்தில் ஜெர்மனியின் ஜோனதன் தா ஒரு கோல் அடித்தார். ஆனால், கோல் அடிக்கப்பட்டதற்கு முன்பு நடந்த ஒரு ஃபவுல் காரணமாக, VAR பரிசோதனைக்குப் பிறகு அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது. இறுதியில், தென் அமெரிக்க அணியான பராகுவே 4-3 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் வென்று, ஜெர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

