லயோலா காலேஜில் இத்தனை டாப் ஹீரோஸ் படிச்சிருக்காங்களா? அசர வைக்கும் லிஸ்ட் இதோ
Cinema Heroes Who Studied at Loyola College : சென்னையில் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக இருக்கும் லயோலா காலேஜில் படித்த நடிகர்கள் யார்.. யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லயோலா காலேஜில் படித்த நடிகர்கள்
சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக, தங்களுக்கு பிடித்த ஹீரோக்கள் என்ன படித்திருக்கிறார்கள், எந்த கல்லூரியில் படித்தார்கள் என்பது குறித்த தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும்.
அந்த வகையில் சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் பயின்ற கல்வி நிறுவனமாக அறியப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களும் இங்கு படித்துள்ளனர். அந்த வரிசையில் லயோலா கல்லூரியில் படித்து பிரபலமான 5 ஹீரோக்கள் பற்றி பார்க்கலாம்.
விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜய், பள்ளிப்படிப்பை முடித்த பிறகு சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்தார். ஆனால் சினிமா மீது இருந்த தீவிர ஆர்வம் காரணமாக கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிப்பதற்கு முன்பே திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த விஜய், படிப்படியாக திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்து இன்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது தமிழ்நாட்டின் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார் விஜய்.
சூர்யா
நடிகர் சூர்யா தனது கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தவர். அங்கு பி.காம் பட்டப்படிப்பை பயின்றுள்ளார். நடிகர் சிவகுமாரின் மகன் என்பதால், தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்குள் வந்துவிடுவாரோ என்ற சந்தேகம் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்ததாக சூர்யா தனது பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். ஆனால் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த சூர்யா, பின்னர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். இன்று முன்னணி நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
விஷால்
நடிகர் விஷாலும் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் ஒருவர். இவர் ஆங்கில இலக்கியம் படித்ததுடன், பின்னர் எம்.பி.ஏ. பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். கல்வியை முடித்த பிறகு சினிமா துறையில் தனது கவனத்தை செலுத்திய விஷால், ஆரம்பத்தில் திரைத்துறையின் பல்வேறு பணிகளை கவனித்து வந்தார். பின்னர் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார்.
மகேஷ் பாபு
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவும் லயோலா கல்லூரியில் பயின்றுள்ளார். கல்லூரியில் பி.காம் படிப்பைத் தேர்வு செய்த அவர், நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பினார். குழந்தை நட்சத்திரமாகவே திரைத்துறையில் அறிமுகமான மகேஷ் பாபு, பின்னர் கதாநாயகனாக பல வெற்றிப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார்.
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய ஜெயம் ரவி, லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். படிப்பை முடித்த பிறகு மும்பையில் சில காலம் பணியாற்றிய அவர், பின்னர் திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உள்ளது. அதன் பிறகு கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனது இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

