Valimai Ajith Role : ‘வலிமை’ அஜித் கேரக்டர் உருவானதன் பின்னணியில் ஜெயலலிதா... மாஸான தகவலை வெளியிட்ட எச்.வினோத்
வலிமை (Valimai) படத்தின் இயக்குனர் எச்.வினோத் (H Vinoth) அப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் உருவானதன் பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இதுதவிர மற்றொரு முக்கிய கதாபாத்திரமான அஜித்தின் தம்பி வேடத்தில் ராஜூ ஐய்யப்பா நடித்துள்ளார்.
அமராவதி படத்தில் அஜித்தின் நண்பராக நடித்த பானு பிரகாஷின் மகன் தான் ராஜூ ஐயப்பா என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயருக்கு ஏற்றார்போல் இப்படத்திற்கு மேலும் வலிமை சேர்த்திருப்பது யுவன் தான்.
அவரின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர்.
இந்நிலையில், வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் அப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். அதில் அஜித்தின் கதாபாத்திரம் உருவானதன் பின்னணி குறித்தும் கூறியுள்ளார்.
அதன்படி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிகாரத்தில் இருந்தபோது, பைக் ரேசர் ஒருவர் நேரடியாக எஸ்.ஐ ஆக பணியமர்த்தப்பட்டார். அந்தச் சம்பவத்தை தழுவி தான் வலிமை படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளதாக எச்.வினோத் கூறி உள்ளார்.