விஸ்வாசம் ரீமேக்கில் நடிக்க முடியாது.... ரிஜெக்ட் பண்ணிய பாலிவுட் ஸ்டார்ஸ் - இதென்ன தூக்குதுரைக்கு வந்த சோதனை
தமிழ் படங்களின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகர்களின் மத்தியில், அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இரண்டு பாலிவுட் நடிகர்கள் மறுத்துள்ளனர்.
கோலிவுட் படங்களுக்கு சமீபகாலமாக பாலிவுட்டில் மவுசு அதிகரித்து வருகிறது. தமிழில் வெளியாகும் படங்களின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட் தயாரிப்பாளர் போட்டிபோட்டு வருகின்றனர். அதன்படி தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கைதி, மாஸ்டர், விக்ரம் வேதா, மாநகரம், சூரரைப் போற்று, ஒத்த செருப்பு, மாநாடு உள்ளிட்ட படங்கள் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன.
இதில் மாநகரம் படத்தை இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
இதேபோல் சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான சூரரைப் போற்று படமும் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் இப்படத்தை தயாரித்த சூர்யா தான் இந்தியிலும் தயாரிக்கிறார். சுதா கொங்கரா தான் இப்படத்தையும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதுதவிர கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கனும், ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சனும் நடிக்கின்றனர். மேலும் விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சயிப் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை புஷ்கர் காயத்ரி இயக்குகின்றனர்.
இவ்வாறு தமிழ் படங்களின் ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகர்களின் மத்தியில், அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில், இப்படத்தின் கதை பாலிவுட் ரசிகர்களுக்கு செட் ஆகாது எனக்கூறி அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார்களாம். இதனால் வேறு நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.