ரிலீசுக்கு முன் அடேங்கப்பா... ரிலீசுக்கு பின் அட போங்கப்பா என சொல்ல வைத்த டாப் 5 பெரிய பட்ஜெட் பிளாப் படங்கள்
2022-ம் ஆண்டு ரிலீசான படங்களில் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விவரமாக பார்க்கலாம்.
ராதே ஷ்யாம்
2022-ம் ஆண்டு அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான படம் என்றால் அது ராதே ஷ்யாம் தான். பிரபாஸ், பூஜா ஹெக்டே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தை ராதா கிருஷ்ணா இயக்கி இருந்தார். ஆக்ஷன் ஹீரோவான பிரபாஸை வைத்து ஆக்ஷனே இல்லாமல் இப்படத்தை எடுத்திருந்ததே அதன் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடி மட்டுமே வசூலித்தது. இப்படம் மூலம் அதன் தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.
லால் சிங் சத்தா
அமீர்கான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசான படம் தான் லால் சிங் சத்தா. இது பாரஸ்ட் கோம்ப் என்கிற ஹாலிவுட் படத்தில் ரீமேக் ஆகும். அமீர்கான் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பின் ரிலீசான இப்படம் படுதோல்வியை சந்தித்ததற்கு முக்கிய காரணம், இதன் ரிலீசுக்கு முன்னர் பாலிவுட் பாய்காட் டிரெண்ட் உருவானது தான். ரசிகர்களின் புறக்கணிப்பால் ரூ.200 கோடி எடுக்கப்பட்ட இப்படம் ரூ.120 கோடி மட்டுமே வசூலித்து ரூ.80 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.
ஷாம்ஷேரா
பாலிவுட்டில் இந்த நிறைய படங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும், அதில் மாபெரும் தோல்வியை சந்தித்த படங்கள் பட்டியலில் ஷாம்ஷேராவும் ஒன்று. ரன்பீர் கபூர் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வாணி கபூர், சஞ்சய் தத் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் இப்படத்தின் மோசமான திரைக்கதை தான். ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடி அளவு நஷ்டத்தை சந்தித்தது.
லைகர்
2022-ல் சொதப்பிய பான் இந்தியா படங்களில் லைகரும் ஒன்று. காசை கொட்டி கொட்டி எடுத்தாலும் கதை சரியாக இல்லை என்றால் அது ஒர்க் அவுட் ஆகாது என்பதற்கு லைகர் திரைப்படம் ஒரு சரியான எடுத்துக்காட்டு. பூரி ஜெகன்நாத் இயக்கிய இப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். சுமார் ரூ.125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதில் பாதியை கூட வசூலிக்கவில்லை. ரூ.65 கோடி வரை நஷ்டத்தை இப்படம் சந்தித்தது.
கோப்ரா
அஜய் ஞானமுத்து - விக்ரம் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் விதவிதமான கெட் அப்களில் நடித்திருந்ததால் படமும் வித்தியாசமாக அமைந்திருக்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது இதன் நீளம் தான். 3 மணிநேரத்திற்கு மேல் இருந்த இப்படத்தின் நீளம் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்தது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் 40 கோடி மட்டுமே வசூலித்தது. இதன்மூலம் இப்படம் ரூ.60 கோடி வரை இழப்பை சந்தித்தது.