அமெரிக்காவில் இருந்து வைரமுத்துவிற்கு போன் செய்த ரஜினிகாந்த்... என்ன சொன்னார் தெரியுமா?
கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு அமெரிக்காவில் இருந்து போன் செய்து பேசியதாக பதிவிட்டுள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 2016ம் ஆண்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருந்துவர்கள் குழு ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு உடற்பரிசோதனைக்காக சென்று வருவது வழக்கம்.
ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட ரஜினிகாந்த், சில மாத ஓய்விற்கு பிறகு படப்பிடிப்பிலும் பங்கேற்றார்.
இதே சமயத்தில் அமெரிக்காவிலும் கொரோனா தொற்று குறைந்தது. இருப்பினும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானம் மூலமாக ஜனவரி 19 ஆம் தேதி அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அங்கு ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக் மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன் மயோ கிளினிக் சாலையை கடப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனிடையே கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு அமெரிக்காவில் இருந்து போன் செய்து பேசியதாக பதிவிட்டுள்ளார். “அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம் - நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.