Beast Review : பலவீனமான வில்லன்கள்..! ‘கிரிஞ்ச்’ வசனங்கள்..! விஜய்யின் படம் பீஸ்ட்டா..? வேஸ்ட்டா??
“இதுவரைக்கும் பார்க்காத விஜய்.. அல்லு தெறிக்கவிடும் ஆக்ஷன்.. ஹாலிவுட்டின் ஜான் விக் படத்தின் ரேஞ்சுக்கு மெனக்கெட்டு எடுத்திருக்கோம்...” இப்படியெல்லாம் பல பலமான மார்தட்டல்களோடு ரிலீஸ் செய்திருக்கிறார்கள் பீஸ்ட் படத்தை. உண்மையில் படம் எப்படி இருக்கு..? விருப்பு வெறுப்பில்லாமல் படம் பாஸா? ஃபெயிலா? என்று பார்க்கலாம்...
Beast Review
சமீபத்தில் பீஸ்ட் பட புரொமோஷணுக்காக இயக்குநர் நெல்சன், நடிகர் விஜய்யை பேட்டி எடுப்பதாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் படத்தை பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க என்று கேட்பார் நெல்சன். அதற்கு விஜய், “படம் நல்லா வரணும்னு நெனச்சு தான் எல்லாரும் வேலை செய்யுறோம், மோசனமா படம் எடுக்கணும்னு யாரும் வருவதில்லை. என் படத்தை பற்றி நானே சொன்னா நல்லா இருக்காது. ரசிகர்கள் சொல்லும் போது நாம எடுத்த முடிவுகள் சரியா இல்லையா என்பதை கத்துக்கலாம்” என்று சொல்லுவார். இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் படத்தை பார்த்து ரசிகர்கள் இன்று என்ன சொல்கிறார்கள்..? விஜய் என்ன கற்றுக்கொள்ளப்போகிறார் என்று பார்த்தால், ஏமாற்றமும் - சந்தோஷமும் கலவையாஅவே இருக்கிறது ரசிகர்கள் மத்தியில்.!
Beast Review
வெறித்தனமான ஓப்பனிங்:
டைட்டில் கார்டில் இருந்தே ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டுசெல்லத் துவங்குகிறார் இயக்குநர் நெல்சன். சன் பிக்சர்ஸ் அவருக்கு இந்த படத்தின் வாய்ப்பை வழங்கிய போது கோலமவு கோகிலா என்ற ஒரு படம் மட்டுமே அவர் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. தன் மீது விஜய்யும், சன் பிக்சர்ஸும் வைத்த நம்பிக்கைக்கு நியாயம் சேர்க்க அவர் உழைத்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் படம் தொடங்குகிறது. பறக்கும் பலூனை பிடித்து, தவிக்கும் குழந்தை கையில் ஒப்படைக்கும் விளையாட்டுத்தனமான ஹீரோ ஓப்பனிங் வீரராகவனுக்கு (விஜய்).. ஆனால் அங்கே திடீரென நடக்கும் தீவிரவாத தாக்குதலை சமாளித்து ஆக்ஷனில் தெறிக்கவிடுகிறார். ஆனா பாருங்க அந்த ஆக்ஷனில், அவர் பலூனை மீட்டுக்கொடுத்த குழந்தையும் இறந்து விடுகிறது.. விஜயின் சொகத்துடன் தான் படம் தொடங்கிறது. (இந்த ஓப்பனிங் காட்சி ஏதாவது குறை சொல்லணும்னு உற்று பார்ப்பவர்களுக்கு துப்பாக்கி படத்தை நினைவுபடுத்தலாம்..!). இந்த சம்பவத்தில் விரக்தி அடைந்து இந்திய உளவுப் படையிலிருந்து (RAW) வெளியேறிவிடுகிறார் விஜய். அதன் பிறகு ஷாப்பிங் மால் போன்ற தனியார் நிறுவனங்களை பாதுகாக்கும் ஒரு தனியார் செக்யூரிடி கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.
Beast Review
நெல்சனின் காமெடி முத்திரை:
இயக்குநர் நெல்சனின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் இரண்டுமே டார்க் காமெடி வகையை சேர்ந்தவை. நயந்தாரா, சிவகார்த்திகேயன் என இரண்டு பட முக்கிய கதாபாத்திரங்களும் படம் முழுக்க சிரிக்கவே மாட்டார்கள். ஆனாலும் காமெடி வொர்க் அவுட் ஆகியிருக்கும். பீஸ்ட்டில் யோகி பாபு, விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் இருந்தாலும், ஹீரோயீன் பூஜா ஹெக்டேவும் காமெடி செய்கிரார். அதுவும் நம்மை ரசிக்க வைக்கிறது. விடிவி கணேஷ் நடத்தும் செக்யூரிடி நிறுவனத்தில் தான் விஜய் வேலைக்கு சேருகிறார்.
Beast Review
விஜய் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் மாலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அதை ஹைஜாக் செய்கின்றனர். இந்திய அரசால் கைது செய்யப்பட்ட ஒரு மோசமான தீவிரவாதியை விடுதலை செய்தால் மட்டுமே அங்கு பிணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ள மக்களை உயிரோடு விடுவோம் என்று வழக்கம்போல மிரட்டுகின்றனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக (!!!) அங்கு பிணைக் கைதிகளோடு விஜய்யும் இருக்கிறார். அவர் என்ன செய்து மக்களை காப்பாற்றுகிறார்? தீவிரவாதிகளை எப்படியெல்லாம் பந்தாடினார்? என்பதை காமெடி, ஆக்ஷன், காதல் கலந்து சுவாரஸ்யமாக சொல்கிறார் இயக்குநர் நெல்சன். “இதை தானே பாஸு நாங்க கூர்கா பத்தின் கதைன்னு சொன்னோம்” என்று விஜய் ஹேட்டர்ஸ் யாரும் சொல்லக்கூடும். ஆனா மேக்கிங் வேற மாதிரி என்று படம் பார்த்தால் புரியும்.
Beast Review
மாஸ் காட்டிய அநிருத்..!
பீஸ்ட் படத்துக்கு உண்மையிலேயே விஜய்யின் ஆக்ஷன், காமெடி கலந்த மாஸ் நடிப்புக்கு அடுத்தபடியாக பெரிய பலம் என்றால் அது அநிருத்தின் இசை தான். படத்தில் தேவையில்லாத இடங்களில் எல்லாம் ஓவர் ஸ்லோ மோஷன் காட்சிகளை திணித்துவிட்டார்கள் என்று பெரும் குற்றச்சாட்டு ரசிகர்களால் இயக்குநர் நெல்சன் மீது வைக்கப்படுகிறது. ஆனால் அது போல போரடிக்கும் தருணங்களை எல்லாம் தனது அதிரடி இசையால் தூக்கிப்பிடித்திருக்கிறார் அநிருத். அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது என்று விஜய் சமீபத்தில் அநிருத்தை பாராட்டினார். உண்மையிலேயே பல இடங்களில் பீஸ்ட் படத்தை அவர் தான் காப்பாற்றியிருக்கிறார். குறிப்பாக “அரபிக் குத்து பாட்டிற்கு எங்க தளபதியை நீங்க சரியா ஆடவைக்கல. ஹேட்டர்ஸ் ட்ரோல் செய்யுறா மாதிரி இருக்கு நடன இயக்கம்” என்று ரசிகர்கள் புலம்பினாலும், பாடல்களோ - பின்னணி இசையோ அனைத்திலும் ரசிகர்களுக்கு குளூகோஸ் கொடுத்து, படத்துக்கு தெம்பு கொடுக்கிறார் அநி..!
Beast Review
பீஸ்ட் - பலம் என்ன..?
ஹாலிவுட்டின் ஜான் விக் போல ஆக்ஷனில் கலக்கும் விஜய்யை காட்டியிருக்கிறோம் என்று சொல்லியிருந்தார் நெல்சன். உண்மை தான், விஜய் தனது எனர்ஜி, எமோஷன் ஆகியவற்றால் திணற வைக்கிறார். முதிர்ச்சிக்காக நரைத்த தாடியுடன் வந்தாலும் இளமையாகவே துள்ளி அடிக்கிறார் விஜய். அது படத்துக்கு மிகப் பெரிய பிளஸ். பல இடங்களில் நெல்சன் ஸ்டைல் டைமிங் காமெடி ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கிங்ஸ்லி, யோகி பாபுவை காட்டிலும் சூப்பராக ஸ்கோர் செய்கிறார் விடிவி கணேஷ். உண்மையில் படத்தை தாங்குவது, விஜய்யின் எனர்ஜி, அனிருத்தின் இசை, அவ்வப்போது கிளிக் ஆகும் காமெடி ஆகியவையே.
Beast Review
பீஸ்ட் - என்னென்ன சொதப்பல்கள்..?
படத்துக்கு மிகப் பெரிய பலமாக பேசப்பட்டது இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார் என்பது தான். ஆனால் செல்வராகவனை இப்படி பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்களே என்று புலம்புகின்றனர் ரசிகர்கள். குறிப்பாக செல்வராகனுக்கும், அமைச்சர் கேரக்டருக்குமான உரையாடல்கள் படு சுமார் ரகம்.
ஹைஜாக் செய்யப்படும் ஷாப்பிங் மால், அதிரடி ஆக்ஷனில் மீட்கும் ஹீரோ என்று ஒரே லொகேஷனை மையமாக வைத்த கதைக்களத்தில், வில்லன்கள் எவ்வளவு பலமானவர்களாக இருக்க வேண்டும் என்பதை பல ஹாலிவுட் படங்கள் காட்டியிருக்கின்றன. அப்படி பீஸ்ட்டில் வில்லன்கள் பயமுறுத்தாமல் போனது மிகப்பெரிய குறை. குறிப்பாக ஹைஜாக் செய்யும் தீவிரவாதிகளில் ஒருவன் விஜய்க்கு பெரும் சவாலாக இருப்பான் என்று நமக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அவனே விஜய்க்கு உதவுவதாக திரைக்கதை அமைத்திருப்பது சரவெடி புஸ்வானமான கதையாக இருக்கிறது. மேலும் கதையின் மையமான மால் ஹைஜாக் செய்யப்படும் காட்சியையே சீரியஸாக வைக்கவில்லையோ என்று இண்டர்வெல் பாப்கார்னை கொரித்தபடி பலர் புலம்புகின்றனர்.
Beast Review
மொத்தத்தில் பீஸ்ட் சூப்பர் என்று சொல்ல முடியாவில்லை என்றாலும், நிச்சயம் என்ஞ்சாய் செய்யக்கூடிய படம் தான்.
சுவாரஸ்யம் என்னவென்றால், பொதுவாக விஜய், அஜித் படங்கள் வந்தால் வேறு ஹீரோக்களின் படங்கள் பின் வாங்கும். ஆனால் நாளை கே.ஜி.எஃப் 2 ரிலீஸாகிறது. இந்த இரண்டு படங்களுக்குள் போட்டி இல்லை என்று அதன் நாயகர்கள் சொன்னாலும், வசூல் ரேஸில் வெற்றி யாருக்கு என்பதை தெரிந்து கொள்வது சுவாரஸ்யம் தான். முடிவு எதுவானாலும் தென்னிந்திய படங்கள் “பேன் இந்தியன்” படங்களாக உயர்ந்து நிற்பது நமக்கு மகிழ்ச்சி தான்.