SK 20 movie Update : உக்ரைன் நடிகையிடம் ஆங்கிலம் கற்கும் சிவகார்த்திகேயன்
SK 20 movie Update : டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்கும் SK 20 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரபோஷப்கா என்கிற நடிகை நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டாக்டர்’ படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதில் டான் மற்றும் அயலான் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவா. இப்படத்தை டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இவர் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘ஜாதி ரத்னலு’ என்கிற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். இப்படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
தற்காலிகமாக SK 20 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சிவகங்கையில் பூஜையுடன் தொடங்கியது. எஸ்.கே.20 படத்தின் கதைப்படி இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு இளம்பெண்ணை நாயகன் சிவகார்த்திகேயன் காதலித்து கரம்பிடிப்பதே மையக்கருவாம். இதனால் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரபோஷப்கா என்கிற நடிகை நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு டீச்சராக நடிப்பதாகவும், நடிகை மரியா இங்கிலீஸ் டீச்சராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மரியாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை சொல்லிக்கொடுக்கும்படியும், மரியா, சிவாவுக்கு இங்கிலீஸ் கற்றுக்கொடுக்கும் படியும் காட்சிகள் உள்ளதாம்.
நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக இது தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுடன் நடிகர்கள் பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... https://tamil.asianetnews.com/gallery/cinema/jayam-ravi-nayanthara-reunite-after-thani-oruvan-for-a-psychological-thriller-r8cxf5