Maanaadu Box Office: பிரச்சனைகளை பொடிபொடியாக்கி வெளியான 'மாநாடு'..! முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
பல பிரச்சனைகளுக்கு நடுவே வெளியாகி, தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் 'மாநாடு' (Maanaadu) படத்தின் முதல் நாள் தமிழ் நாடு வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிம்புவின் படங்கள் என்றாலே பிரச்சன்னைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான், அந்த வகையில் பல பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்தித்த பின்னரே நேற்று வெளியானது 'மாநாடு' திரைப்படம்.
படம் வெளியாவதற்கு சில மணி நேரங்கள் இருந்த நிலையில் கூட, படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்பாராத பிரச்சனை காரணமாக மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவித்து ஒட்டு மொத்த சிம்பு ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் அந்த பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டதை தொடர்ந்து படம் கண்டிப்பாக வெளியாவது உறுதி என்கிற தகவல் வெளியானது. அதே நேரம், ரசிகர்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காலை 5 மணி சிறப்பு காட்சிகள் மட்டும் திரையிட முடியாமல் போனது.
அடுத்தடுத்த பல பிரச்சனைகளை சமாளித்து விட்டு வெளியான 'மாநாடு' படத்திற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதே போல் இது டைம் லூப் படம் என்பதால்... வந்த காட்சிகளே திரும்ப திரும்ப வந்தாலும் கூட, ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பாராத சில சுவாரஸ்யமான விஷயங்களை புகுத்தி தன்னுடைய புத்திசாலி தனத்தை வெங்கட் பிரபு காட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்க்கு முன் வெளியான வெங்கட் பிரபு படங்களை விட மிகவும் வித்தியாசமான படைப்பாக இருக்கும் 'மாநாடு' படத்தின் மூலம் தன்னால் இப்படியும் படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
அதே போல் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு படு மாஸ்... யுவன் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டுமே படத்தில் இருந்தாலும், பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்துள்ளார்.
வழக்கமான அரசியல்வாதியாக ஒய்.ஜி.மகேந்திரன், மற்றும் எஸ்.ஏ.சி நடித்துள்ளனர். கதாநாயகி பாத்திரத்திற்கு பொருந்தி அழகிய பொம்மை போல் வந்து செல்லும் கல்யாணி ப்ரியதர்ஷன் ரசிகர்களை கவர்கிறார். மேலும் இந்த படத்தில் நடித்துள்ள கருணாகரன், பிரேம் ஜி, சுப்பு பஞ்சு, மனோஜ் பாரதிராஜா என அனைவருமே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வரும் 'மாநாடு' திரைப்படம் முதல் தமிழக வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது , ஒரே நாளில் மட்டுமே 'மாநாடு' சுமார் 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். விடுமுறை நாட்கள் வர உள்ளதால் மேலும் வசூல் அதிகரிக்க கூடும் என, திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவும் படு உச்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.