மீண்டும் சறுக்கலை சந்தித்த சிவகார்த்திகேயன்... பிரின்ஸ் படத்தின் பின்னடைவுக்கான காரணம் என்ன?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாக கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோலிவுட்டின் இளவரசன் என்று கொண்டாடப்படுபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தால் சாதிக்க முடியாது என்கிற யூகங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உயர்ந்துள்ளார். இந்த இடம் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். தொடர்ந்து வெற்றிகளை குவித்த இவருக்கும் சில சறுக்கல்கள் இருந்தன.
அப்படி இவர் நடித்த சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ, ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதோடு சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் கடும் சரிவை சந்தித்தது. பின்னர் அதிலிருந்து மீளும் விதமாக டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து பார்முக்கு திரும்பினார். இந்த இரண்டு படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தன.
இதையும் படியுங்கள்... சர்தார் வசூல்ல பாதி கூட இல்ல... இரண்டாவது நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பிரின்ஸ்
இப்படி இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். தீபாவளி விருந்தாக ரிலீசான இப்படம் ரசிகர்களின் வயிற்றை நிரப்பவில்லை என்பதே உண்மை. காமெடியை நம்பியே எடுக்கப்பட்ட இப்படம் போதிய வரவேற்பை பெறாததற்கு காரணமும் அதே காமெடி தான்.
நெட்டிசன் ஒருவரெல்லாம் படம் பார்த்த பின் மிகவும் ஆதங்கத்துடன் பதிவிட்டு இருந்தார். அதாவது விமர்சனங்களை நம்பாமல், சிவகார்த்திகேயன் படம் என நம்பி சென்றதாகவும், படத்தை பார்க்க பார்க்க அதில் வரும் காமெடிகளுக்கு சிரிப்பு வராமல், வெறுப்பு தான் வந்தது என பதிவிட்டிருந்தார். அந்த அளவுக்கு இப்படத்தின் காமெடி காட்சிகள் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி இப்படத்தை இயக்கியது தெலுங்கு இயக்குனர். அவருக்கு தமிழ்நாட்டு ஆடியன்ஸின் பல்ஸ் புரியவில்லை என்பதும் இதன்மூலம் தெரிகிறது.
பிரின்ஸ் படத்தின் ரிசல்ட், தனுஷ் மற்றும் விஜய் ரசிகர்களுக்கும் சற்று கலக்கத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் அவர் இருவரும் அடுத்ததாக நடித்து வரும் வாத்தி மற்றும் வாரிசு ஆகிய படங்களை இயக்கியுள்ளதும் தெலுங்கு இயக்குனர்கள் தான். அவர்களாவது வெற்றி வாகைசூடுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... தீபாவளி கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்த நடிகர் விஜய்... எந்த நாட்டுக்கு செல்கிறார் தெரியுமா?