- Home
- Cinema
- சிவகார்த்திகேயனுக்கு விபூதி அடிக்க பார்க்கும் ராஜமவுலி... ஆர்.ஆர்.ஆர் வலையில் இருந்து தப்பிக்குமா டான்?
சிவகார்த்திகேயனுக்கு விபூதி அடிக்க பார்க்கும் ராஜமவுலி... ஆர்.ஆர்.ஆர் வலையில் இருந்து தப்பிக்குமா டான்?
ஆர்.ஆர்.ஆர் படம் மார்ச் 25-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயனின் டான் படத்துக்கு போட்டியாக அப்படம் களமிறங்க உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் டான். இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய், பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 25-ந் தேதி வெளியாகும் என நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவும் நேற்று மாலை அப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது. அதன்படி அப்படமும் மார்ச் 25-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயனின் டான் படத்துக்கு போட்டியாக ஆர்.ஆர்.ஆர் படம் களமிறங்க உள்ளது.
ஆர்.ஆர்.ஆர் படம் முதலில் ஜனவரி 7-ந் தேதி ரிலீசாக இருந்தது. இதற்கான புரமோஷன் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது சென்னையில் நடந்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் படத்துக்கு போட்டியாகவே இயக்குனர் ராஜமவுலி தனது ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை வெளியிடுவதை பார்க்கும் போது, காக்கா முட்டை படத்தில், யோகிபாபு சொல்லும் “எனக்கே விபூதி அடிக்க பாக்குறேல” என்ற டயலாக் தான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.