- Home
- Cinema
- மகானில் வாணி போஜன் கேரக்டரை கத்திரி போட்டு தூக்கியது ஏன்? - ஓப்பனாக உண்மையை போட்டுடைத்த கார்த்திக் சுப்புராஜ்
மகானில் வாணி போஜன் கேரக்டரை கத்திரி போட்டு தூக்கியது ஏன்? - ஓப்பனாக உண்மையை போட்டுடைத்த கார்த்திக் சுப்புராஜ்
மகான் படத்தில் வாணி போஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அவர் நடித்த காட்சிகளை படத்தில் இருந்து கத்திரி போட்டு தூக்கியது ஏன் என்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், விக்ரமின் மகன் துருவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிம்ரன், பாபி சிம்ஹா, சனத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மகான் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
நட்புக்குள் எற்படும் தகராறினால் மூன்று நண்பர்கள் பிரிகின்றனர். அவர்கள் மூவரும் பல வருடங்களுக்கு பின்பு வெவ்வேறு சூழலில் சந்திக்கின்றார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதைச்சுருக்கம். இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் நடித்த காட்சிகள் ஒன்றுகூட படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவர் நடித்த காட்சிகளை ஏன், படத்தில் வைக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “படத்தின் கதைப்படி விக்ரம் சிம்ரனை விட்டு பிரிந்து சென்ற பிறகு வாணி போஜனுடன் சேர்ந்து பயணிப்பது போன்று இருந்தது. அவர்கள் காம்பினேஷனில் நிறைய காட்சிகள் படமாக்கினோம். அவர் நடிக்க இருந்த காட்சிகளுக்கு அதிக கூட்டம் தேவைப்பட்டது.
ஆனால் கொரோனா 2-வது அலை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக ஷூட் பண்ண முடியவில்லை. அதனால் அந்த கதாபாத்திரம் முழுமையடையாமல் இருந்தது. இதன் காரணமாக வேறு வழியின்றி அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.