இனி 10 வருஷத்துக்கு பைக் ஓட்ட முடியாது... டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சர்ச்சைக்குரிய யூடியூப்பரான டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.
TTF Vasan
யூடியூப்பில் பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. யூடியூப்பில் இவருக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருப்பதால் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார் டிடிஎப் வாசன். அவர் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ பதிவிடுவதால் அது அவரது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் செயல் என எதிர்ப்புகளும் கிளம்பி வந்தது.
youtuber TTF vasan
இதனிடையே கடந்த மாதம் மகாராஷ்ட்ராவுக்கு தன்னுடைய பைக்கில் டிடிஎப் வாசன் பைக் டிரிப் சென்றுகொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற வாசன் திடீரென வீலிங் செய்ய முயன்றபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரம் உள்ள தடுப்பின் மீது மோதி தூக்கிவீசப்பட்டார். அவர் கவச உடைகள் முறையாக அணிந்திருந்ததால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
TTF vasan Accident
வாசன் விபத்தில் சிக்கிய காட்சிகள் அருகில் உள்ள பெட்ரோல் பல்கின் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதில் வாசன் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கியது தெளிவாக பதிவாகி இருந்ததால் அவரை அதிரடியாக கைது செய்த போலீசார், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வாசன்.
TTF vasan Arrest
வாசனுக்கு ஜாமீன் கோரி தொடர்ந்து முறையிடப்பட்டு வந்தாலும் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்ற தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அண்மையில் அவரது நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டபோது தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் தர மறுத்ததோடு, வாசனின் பைக்கை எரிக்க வேண்டும் என காட்டமாக கூறினார்.
TTF Vasan license cancelled
அதோடு வாசனின் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார். இதனால் 2033-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி வரை டிடிஎப் வாசனால் பைக் ஓட்ட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதையும் படியுங்கள்...அந்த ஒரு டயலாக்கால் லியோ படத்துக்கு வந்த புது சிக்கல்... படக்குழு மீது கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்