3 ஆண்டுகளில் கசந்த காதல்... விவாகரத்துக்கு ரெடியாகும் மற்றுமொரு கோலிவுட் ஜோடி!
கோலிவுட்டில் சமீப காலமாக விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த பட்டியலில் பிரபல நடிகை ஒருவர் இணைய உள்ளாராம்.

Hansika Motwani Heading for Divorce
தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம், சூர்யா உடன் சிங்கம் 2, கார்த்தியின் பிரியாணி, சிவகார்த்திகேயன் உடன் மான் கராத்தே என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார் ஹன்சிகா. ஒரு கட்டத்தில் நடிகர் சிம்பு மீதும் காதல் வயப்பட்டார். இருவரும் ஜோடியாக வாலு படத்தில் நடித்தபோது காதலித்தனர். அந்த சமயத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.
ஹன்சிகா கல்யாணம்
நடிகை ஹன்சிகா கொரோனாவுக்கு பின் மார்க்கெட் இழந்து தவித்து வந்தார். இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த அவர், கடந்த 2022ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை காதலிப்பதாக அறிவித்தார். சோஹைல் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டார் ஹன்சிகா. இவர்கள் இருவரும் காதலிக்க முக்கிய காரணமாக இருந்தது அவரது தோழி தான். ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் முதலில் திருமணம் செய்துகொண்டார். அப்போது ஹன்சிகா உடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஹன்சிகாவை திருமணம் செய்துகொண்டார் சோஹைல்.
கணவரை பிரியும் ஹன்சிகா?
நடிகை ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது. அதுமட்டுமின்றி இவரது திருமணம் ஒரு ஆவணப்படமாக வெளியானது. கணவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஹன்சிகா, சமீப காலமாக அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஹன்சிகா தனது அம்மா வீட்டில் வசித்து வருகிறாராம். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் உறுதி என பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
விவகாரத்துக்கு தயாராகும் ஹன்சிகா
தற்போது வெளியாகி உள்ள தகவல்படி நடிகை ஹன்சிகாவும், அவரது கணவர் சோஹைலும் விவாகரத்து தொடர்பாக கோர்ட்டுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது விவாகரத்து செய்தி வெளிவர வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் விவாகரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அண்மையில், தனுஷ், ஜிவி பிரகாஷ், ரவி மோகன், இயக்குனர் பாலா, இசையமைப்பாளர் இமான், நடிகை சமந்தா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், தற்போது ஹன்சிகாவின் பெயரும் அதில் அடிபடுகிறது.