Global Community oscar : அடிதூள்... ‘ஜெய் பீம்’காக ஆஸ்கர் விருது பெறும் சூர்யா-ஜோதிகா!! குவியும் வாழ்த்துக்கள்
மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்பை கொடுத்து, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பிரபலங்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கபட்டு வருகிறது.
உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது அனைவரும் அறிந்ததே.
இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு (பார்வதி அம்மாள்) நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
இப்படம் எந்த அளவுக்கு பாராட்டுக்களை பெற்றதோ அதே அளவு சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் கொடுமைக்காரர்களாக சித்தரித்துள்ளதாக அடுத்தடுத்து பல பிரச்சனைகளை ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் எதிர்கொண்டார் நடிகர் சூர்யா. இவ்வாறு பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்துக்கு பல்வேறு விருதுகளும், அங்கீகாரமும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் ஜெய் பீம் பட காட்சி இடம்பெற்று சாதனை படைத்தது.
இந்நிலையில், தற்போது ஜெய் பீம் படத்தை தயாரித்த சூர்யா - ஜோதிகாவுக்கு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்பை கொடுத்து, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பிரபலங்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கபட்டு வருகிறது.
இதேபோல் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19-ந் தேதியன்று அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேவில் நடைபெற உள்ளது.