யூடியூப்பில் தனுஷ் ராஜ்ஜியம்... 3 வருஷமா டாப்பில் இருந்த ரவுடி பேபியை ஒரே நாளில் தட்டித்தூக்கிய மாறன் பட பாடல்
மாறன் படத்தில் இடம்பெறும் பொல்லாத உலகம் என்கிற பாடலின் வீடியோவை குடியரசு தினத்தன்று படக்குழு வெளியிட்டது. தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடியிருந்த இப்பாடல் வெளியானது முதல் யூடியூப்பில் செம்ம வைரல் ஆனது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் மாறன். துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.
மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாறன் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் இடம்பெறும் பொல்லாத உலகம் என்கிற பாடலின் வீடியோவை குடியரசு தினத்தன்று படக்குழு வெளியிட்டது. தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடியிருந்த இப்பாடல் வெளியானது முதல் யூடியூப்பில் செம்ம வைரல் ஆனது. இப்பாடலில் தனுஷின் நடனமும் வேறலெவலில் இருந்ததால் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது.
இந்நிலையில், பொல்லாத உலகம் பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி ஒரே நாளில் 7.8 மில்லியன் பார்வைகளை பெற்று, வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் வீடியோ பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் மாரி 2 படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடல் 7 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் இருந்தது. 3 வருஷமாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனையை பொல்லாத உலகம் பாடல் தற்போது தட்டித்தூக்கி உள்ளது.