அண்ணனின் துணையோடு பொன்னியின் செல்வனுடன் மோதும் தனுஷ்... நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Naane Varuven : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் நானே வருவேன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போது 5-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ள படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். செல்வராகவனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை இந்துஜாவும், ஸ்வீடன் நாட்டு நடிகை எல்விரம்மும் நடித்துள்ளார். நானே வருவேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
அதோடு இப்படத்தை இம்மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்ததில் இருந்தே இப்படம் பொன்னியின் செல்வனுடன் மோத உள்ளதாக பேச்சு அடிபட்டது. பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவில் இருந்து உருவான ஒரு பிரம்மாண்ட படைப்பு என்பதால் அப்படத்துக்கு போட்டியாக வெளியிட வேண்டாம் என்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... செல்பியுடன் தொடங்கியது... சோழர்களின் சுற்றுப்பயணம் - பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களின் வைரல் கிளிக்ஸ் இதோ
ஆனால் படக்குழு அப்படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்வதில் உறுதியாக உள்ளது. தற்போது நானே வருவேன் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி அதாவது பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன திருச்சிற்றம்பலம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், நானே வருவேன் படத்திற்கு கணிசமான அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பொன்னியின் செல்வனுக்கு அதிக அளவிலான தியேட்டர்கள் கிடைப்பதற்கு சிக்கலாக அமையும் என்றும் திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... அவளே என் கடவுள்... இறந்த மகள் தூரிகை பற்றி கவிதையில் உருகிய கபிலன்... கண் கலங்க வைத்த வரிகள்..!