- Home
- Cinema
- அட்லீ முதல் ராஜமெளலி வரை... இந்தியாவின் டாப் 10 காஸ்ட்லி இயக்குநர்கள்..! அதிக சம்பளம் வாங்குவது யார்?
அட்லீ முதல் ராஜமெளலி வரை... இந்தியாவின் டாப் 10 காஸ்ட்லி இயக்குநர்கள்..! அதிக சம்பளம் வாங்குவது யார்?
இந்தியாவில் நடிகர்களுக்கு நிகராக இயக்குநர்களுக்கும் அதிகளவில் சம்பளம் வாரி வழங்கப்படுகிறது. அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய சினிமா இயக்குநர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 10 Highest Paid Movie Directors in India
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பலர் உள்ளனர். இந்த பட்டியலில் பாலிவுட் இயக்குநர்களை காட்டிலும் தென்னிந்திய இயக்குநர்கள் தான் அதிகளவில் உள்ளனர். அதற்கு முக்கிய காரணம் பான் இந்தியா படங்கள் தான். பான் இந்தியா அளவில் ஒரு ஹிட் கொடுத்தாலே கோடிக்கணக்கில் சம்பளத்தை வாரி வழங்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள். அந்த வகையில் ஒரு படத்தை இயக்க அதிக சம்பளம் வாங்கும் நாட்டின் டாப் 10 இயக்குநர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
10. ஷங்கர்
அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் 10வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்தை இயக்க 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவரது இயக்கத்தில் வெளிவர உள்ள அடுத்த திரைப்படம் 'இந்தியன் 3'. இதில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருக்கிறார்.
9. லோகேஷ் கனகராஜ்
கோலிவுட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த லிஸ்ட்டில் 9-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவரது அடுத்த படங்கள் 'கைதி 2' மற்றும் 'விக்ரம் 2'. இவர் தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே அவருக்கு ரூ.35 கோடி சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
8. சஞ்சய் லீலா பன்சாலி
பாலிவுட்டின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் தான் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளார். இவருக்கு ஒரு படத்திற்கு 65 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இவரது அடுத்த படம் 'லவ் அண்ட் வார்'.
7. சுகுமார்
அல்லு அர்ஜுனை வைத்து புஷ்பா என்கிற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கியதன் மூலம் பான் இந்தியா அளவில் ஜொலித்தவர் தான் இயக்குநர் சுகுமார். ஒரு படத்திற்கு 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவர் இந்த லிஸ்ட்டில் 7-ம் இடத்தில் உள்ளார். இவரது அடுத்த படம் 'புஷ்பா 3'.
6. ராஜ்குமார் ஹிரானி
பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் 6-ம் இடம் பிடித்துள்ளார். இவரது அடுத்த படம் தாதாசாகேப் பால்கே பயோபிக்.
5. பிரசாந்த் நீல்
கேஜிஎஃப் என்கிற ஒற்றைப் படம் மூலம் பான் இந்தியா செல்வாக்கை பெற்றவர் தான் இயக்குநர் பிரசாந்த் நீல். இவரின் சம்பளம் 100 கோடியாம். இவரது அடுத்த படங்கள் 'டிராகன்' மற்றும் 'சலார் 2'. இவர் இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளார்.
4. ரிஷப் ஷெட்டி
காந்தாரா என்கிற ஒரே படத்தால் ரிஷப் ஷெட்டியின் வாழ்க்கையே ஓஹோவென மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். காந்தாரா முதல் பாகத்திற்கு 2 கோடி சம்பளம் வாங்கிய ரிஷப் ஷெட்டி அதன் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் 1-ஐ இயக்கி நடிக்க ரூ.100 கோடி சம்பளம் வாங்கினார். இவரின் அடுத்த படம் காந்தாரா 3.
3. அட்லீ
குருவை மிஞ்சிய சிஷ்யன் தான் அட்லீ. இவரின் குரு ஷங்கர் ஒரு படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் அட்லீ ஒரு படத்தை இயக்க 100 கோடி சம்பளம் வாங்குகிறார். இவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார். அப்படம் 800 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.
2. சந்தீப் ரெட்டி வங்கா
அர்ஜுன் ரெட்டி, அனிமல் என பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த சந்தீப் ரெட்டி வங்காவின் சம்பளம் 100 முதல் 150 கோடியாம். இவரது அடுத்த படங்கள் 'ஸ்பிரிட்' மற்றும் 'அனிமல் பார்க்'.
1. ராஜமெளலி
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் என்றால் அது ராஜமெளலி தான். இவர் இதுவரை ஒரு பிளாப் படம் கூட கொடுத்ததில்லை. தொட்டதெல்லாம் ஹிட் கொடுப்பதால், இவருக்கு இந்தியாவில் மவுசு அதிகம். இவர் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளமாக வாங்குகிறார். இவரின் அடுத்த படம் வாரணாசி.

