ஷூட்டிங்கில் விபத்து! அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியல... நூலிழையில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து குறித்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகனான இவருக்கு ஏ.ஆர்.அமீன் என்கிற மகனும் உள்ளார். இவரும் தந்தையைப் போலவே இசையின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். அவ்வப்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் பாடும் அமீன், தனியாக சுயாதீன இசை ஆல்பங்களை உருவாக்கி அதில் நடித்தும் வருகிறார்.
அந்த வகையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஒரு மியூசிக் வீடியோவிற்கான படப்பிடிப்பில் ஏ.ஆர்.அமீன் கலந்துகொண்டிருக்கிறார். இதற்காக வெட்ட வெளியில் அரங்கம் அமைந்து அதன் மேல் கிரேன் உதவியுடன் மின் விளக்குகளை தாங்கியபடி பிரம்மாண்ட கம்பி ஒன்று தொங்கவிடப்பட்டு அங்கு ஷூட்டிங் நடைபெற்று வந்துள்ளது. ஏ.ஆர்.அமீன் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வந்த சமயத்தில் அங்கு எதிர்பாரா விபத்து நிகழ்ந்துள்ளது.
அதாவது கிரேனின் உதவியுடன் அந்தரத்தில் தொடங்கிக் கொண்டிருந்த கம்பி திடீரென மேடையின் மீது அறுந்து விழுந்துள்ளது. அப்போது கீழே நடனம் ஆடிக் கொண்டிருந்த ஏ.ஆர்.அமீன் மற்றும் குழுவினர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பி உள்ளனர். இந்த நிகழ்வின் போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் அமீன்.
இதையும் படியுங்கள்... பாரதிராஜா சார் எப்போதுமே ஒரு லெஜெண்ட்... நடிகை ரம்யா பாண்டியன் புகழாரம்!!
மேலும் அந்த பதிவில் அவர் கூறியதாவது : “இந்த நேரத்தில் என்னுடைய பெற்றோருக்கு, நலம் விரும்பிகளுக்கு, ஆசிரியர்கள் என எல்லாருக்குமே நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் நான் உயிரோடு இருக்கிறேன். 3 நாள் முன்னாடி நாங்கள் மியூசிக் வீடியோவுக்காக ஷூட்டிங் செய்து கொண்டிருந்தபோது, மேலேஇருந்த லைட் சரிந்து கீழே விழுந்தது.
நான் ஒரு செகண்ட் முன்னாடியோ, அல்லது பின்னாடியோ தள்ளிப்போய் இருந்தால் அவை என்மீது தான் விழுந்திருக்கும். எங்களுக்கு எதுவும் ஆகல நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். இருந்தாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து நானும் என்னுடையை டீமும் இன்னும் மீளவில்லை” என குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.அமீனின் இந்த பதிவைப் பார்த்து பதறிப்போன ஏ.ஆர்.ரகுமான், இறைவனின் அருளால் நீ தப்பித்து இருக்கிறாய் என கமெண்ட் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்... தரமான செயலால்...! நிஜ 'வாத்தி' கே.ரங்கையாவை பெருமைப்படுத்திய தனுஷின் வாத்தி படக்குழு!