- Home
- Cinema
- ஒரே படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா இசையமைத்த கதை தெரியுமா? எல்லா பாட்டுமே சூப்பர் ஹிட்..!
ஒரே படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா இசையமைத்த கதை தெரியுமா? எல்லா பாட்டுமே சூப்பர் ஹிட்..!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரும் இளையராஜாவும் ஒரே படத்துக்கு இசையமைத்த அரிய நிகழ்வு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Interesting Facts About AR Rahman
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பட்டியலை புரட்டிப் பார்த்தால் அதில் முன்னணியில் இருப்பவர் இளையராஜா, 1976 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், அதன் பின்னர் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இசை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார். அவரது இசை ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியாமல் பல இசையமைப்பாளர்கள் பின்னடைவு சந்தித்த காலமும் அது.
ராஜாவுக்கு போட்டியாக உருவெடுத்த ஏ.ஆர்.ரகுமான்
இந்த சூழலில்தான் 1990களின் தொடக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் என்ற இசைப்புயல் அறிமுகம் ஆனது. அவரது முதல் படமான ரோஜா தேசிய விருதைப் பெற்றது மட்டுமல்லாமல், இசை உலகில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில், இளையராஜா இசையமைத்த தேவர்மகன் படமும் தேசிய விருதுப் போட்டியில் இருந்தது. கடும் போட்டிக்கிடையே, ஒரு வாக்கு வித்தியாசத்தில் ரகுமான் தேசிய விருதை கைப்பற்றினார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இசையமைப்பாளராக அறிமுகமாகும் முன் ஏ.ஆர்.ரகுமான், இளையராஜாவிடம் கீபோர்டு பிளேயராக பணியாற்றி வந்துள்ளார். புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் அவர் இசைக்குழுவின் முக்கிய உறுப்பினராக ரகுமான் இருந்துள்ளார்.
ஒரே படத்தில் ராஜா - ரகுமான் இசை
இளையராஜா மற்றும் ரகுமான் இருவரும் நேரடியாக ஒரே படத்திற்கு இசையமைத்த சம்பவம் அரிதாகவே நிகழ்ந்துள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் காதலுக்கு மரியாதை. விஜய் – ஷாலினி நடிப்பில் வெளியான இந்தப் படத்தை மலையாள இயக்குநர் பாசில் இயக்கினார். முதலில் மலையாளத்தில் உருவான இப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பின்னர் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ்ப் பதிப்புக்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் காலத்தால் அழியாத படைப்புகளாக உள்ளன.
அந்தப் படம் எது?
இந்தப் படம் தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்தியில் Doli Saja Ke Rakhna என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பிரியதர்ஷன் இயக்கிய இந்தப் படத்தில் அக்ஷய் கண்ணா நாயகனாகவும், ஜோதிகா நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்தி பதிப்பிற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். அவரது இசையில் வெளியான பாடல்கள் இந்திய முழுவதும் பரவலாக வரவேற்பைப் பெற்றன.
ஏ.ஆர்.ரகுமானின் தரமான சம்பவம்
ஒரே கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்களுக்கு, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது, தமிழ் சினிமா வரலாற்றில் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இந்தி ரீமேக்கிற்காக ரகுமான் போட்ட ட்யூன்கள் பின்னாளில், தமிழில் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் உருவான ஜோடி பட பாடல்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவலாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

