‘காஸ்ட்லி’ அனிருத் முதல் ‘கம்மி’ ஜிவி வரை... அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் யார்.. யார்? - முழு விவரம்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள் பற்றியும் அவர்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மனிதரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது இசை. இசை இல்லாமல் ஒரு நாளை யாராலும் கடந்து செல்ல முடியாது. மனிதனின் உணர்வோடு ஒன்றிணைந்த இந்த இசையை படங்களின் மூலம் நமக்கு பரிசாக தருபவர்கள் தான் இசையமைப்பாளர்கள். அப்படிப்பட்ட இசையமைப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அனிருத்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப்பயிற்சி பெற்றவர் தான் அனிருத். இன்று குருவை மிஞ்சிய சிஷியனாக வளர்ந்து நிற்கிறார். தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா சினிமாவிலேயே அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் என அனைவரின் படங்களையும் தற்போது தன் கைவசம் வைத்துள்ள அனிருத் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.
ஏ.ஆர்.ரகுமான்
30 ஆண்டுகளுக்கு மேலாக இசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக நீடித்திருப்பது சாதாரண விஷயமல்ல, இளையராஜாவுக்கு அடுத்தபடியாக அந்த பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். ரோஜாவின் தொடங்கிய அவரது பயணம், இன்று மாமன்னன் வரை செல்வசெழிப்போடு சென்றுகொண்டிருக்கிறது. இவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளை சேர்ந்த டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஒரு படத்திற்கு ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
இதையும் படியுங்கள்... 'பரியேரும் பெருமாள்' பட ஹீரோ கதிரை படப்பிடிப்பில் வெச்சு செஞ்ச மாரி செல்வராஜ்! உண்மையை உடைத்த பிரபலம்!
தமன்
டாப் இசையமைப்பாளர்கள் பட்டியலில் தமன் இடம்பெற்றிருக்க காரணம் அவரின் தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் தரமான வைரல் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தமன், தமிழில் கடைசியாக நடிகர் விஜய்யின் வாரிசு படத்திற்கு இசையமைத்து இருந்தார். தற்போது இவர் ஷங்கர் இயக்கும் கேம்சேஞ்சர் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் தமன் ஒரு படத்திற்கு ரூ.7 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.
யுவன் சங்கர் ராஜா
இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா, தன்னுடைய தனித்துவமான இசையால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு வெற்றிப்பாடல்களுக்கு இசையமைத்து கோலிவுட்டில் இசை ராஜாவாக வலம் வந்துகொண்டிருக்கும் யுவன், தற்போது விஜய்யின் தளபதி 68 படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் மூலம் விஜய்யுடன் 20 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி அமைக்கிறார் யுவன். இவர் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
ஜிவி பிரகாஷ்குமார்
அனிருத்தை போல் ஏ.ஆர்.ரகுமானின் மற்றுமொரு மாணவன் தான் ஜிவி பிரகாஷ். இவரும் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். மனதை வருடும் பாடல்களை கொடுப்பதில் கில்லாடியான ஜிவி பிரகாஷ், தற்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஜிவி பிரகாஷ் ஹீரோ ஆன பின்பும் இசையமைப்பதையும் தொடர்ந்து வருகிறார். தற்போது சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் இவர் கைவசம் உள்ளன. இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
இதையும் படியுங்கள்... சூர்யா இல்லாமலே வாடிவாசல் பட வேலையை ஆரம்பித்து... வேறலெவல் சம்பவம் செய்யும் வெற்றிமாறன் - சூப்பர் அப்டேட் இதோ