- Home
- Cinema
- இப்படி ஏமாத்திட்டீங்களே தல... மனசு வலிக்குது - போஸ்டர் ஒட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்
இப்படி ஏமாத்திட்டீங்களே தல... மனசு வலிக்குது - போஸ்டர் ஒட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய அஜித் ரசிகர்கள்
வலிமை திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், கோவையை சேர்ந்த அஜித் ரசிகர்கள், போஸ்டர் ஒட்டி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருந்த இப்படம் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் போடப்பட்டுள்ளதால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மேலும் நிலைமை சீரானது திரையரங்குகளில் வெளியிடுவோம் என படக்குழு தெரிவித்துள்ளது.
வலிமை படத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, படக்குழுவின் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் கோவையை சேர்ந்த அஜித் ரசிகர்கள், போஸ்டர் ஒட்டி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
அந்த போஸ்டரில், "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" குறிப்பிடப்பட்டு உள்ளது. கோவையை சேர்ந்த அடங்காத அஜித் குரூப்ஸ் என்கிற குழுவினர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.