வெறித்தனமான ரசிகையா இருப்பாங்க போல... CSK மீது இவ்ளோ பக்தியா? - வேண்டுதலை நிறைவேற்ற தயாரான வரலட்சுமி
வேண்டியபடியே ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் வேண்டுதலை நிறைவேற்ற தயாராகி உள்ளார்.
உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடரான ஐபிஎல் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 16-வது சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. அந்த அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. இந்த இறுதிப்போட்டி கடந்த மே 28-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கி 30-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு தான் முடிவடைந்தது.
மழை காரணமாக இந்தப் போட்டி முடிவுக்கு வர 3 நாட்கள் ஆனது. இந்த இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி அதிரடியாக ஆடி 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து மழை குறுக்கிட்டதால் 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த கடின இலக்கை வெறிகொண்டு விரட்டிய சென்னை அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில், அந்த ஓவரை வீசிய மோகித் சர்மா முதல் 4 பந்துகளை துல்லியமாக யார்க்கர் வீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில், அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரியை பறக்கவிட்ட ஜடேஜா சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல வித்திட்டார். சென்னை அணியின் இந்த த்ரில் வெற்றியை காண ஏராளமான கோலிவுட் பிரபலங்களும் அகமதாபாத் சென்றிருந்தனர்.
இதையும் படியுங்கள்... மினி கோடம்பாக்கமாக மாறிய அகமதாபாத் ஸ்டேடியம்... ஐபிஎல் பைனல்ஸை படையெடுத்து வந்து பார்த்த கோலிவுட் பிரபலங்கள்
அதில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியும் ஒருவர். சென்னை அணியின் தீவிர ரசிகையான இவர், சென்னை அணி கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் இருந்த போது, இந்த 10 ரன்களை அடித்து சென்னை அணி வெற்றி பெற்றால், தான் அடுத்த ஒரு மாதத்திற்கு சைவமாக மாறிவிடுவதாக வேண்டி இருந்தாராம்.
அவர் வேண்டியபடியே சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டதால், அடுத்த ஒரு மாதம் அசைவ உணவுகளை தவித்துவிட்டு முழுவதுமாக சைவமாக மாறி இருப்பதாக வரலட்சுமி தன் டுவிட்டர் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் வெறித்தனமான சிஎஸ்கே ரசிகையா இருப்பாங்க போல என பதிவிட்டு வருகின்றனர். சிலரோ சிஎஸ்கே மீது இவ்ளோ பக்தியா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சொன்னபடியே கோப்பையை தட்டித்தூக்கி கெத்து காட்டிய தோனி... அன்புடன் வாழ்த்திய குஷ்பு