கமல் உடனான முத்தக்காட்சி சர்ச்சை; அபிராமி கொடுத்த ‘தக் லைஃப்’ பதிலடி
தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் முத்தக்காட்சியில் நடித்தது சர்ச்சையான நிலையில், அதுபற்றி நடிகை அபிராமி விளக்கம் அளித்துள்ளார்.

Thug Life Kiss Scene Controversy
திரும்பிய பக்கமெல்லாம் தக் லைஃப் திரைப்படத்தைப் பற்றிய பேச்சு தான். கமல்ஹாசன் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்து உருவானது தான் கன்னடம் என பேசியது பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தக் லைஃப் படத்திலும் பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. குறிப்பாக அப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆன போது அதில் கமல்ஹாசன், அபிராமி உடன் முத்தக்காட்சியில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கமல் - அபிராமி ஜோடி
கமல்ஹாசன் தன்னைவிட 30 வயது இளையவருடன் முத்தக் காட்சியில் நடித்தது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். கமலும் அபிராமியும் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் விருமாண்டி திரைப்படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்திருந்தார் அபிராமி. அதன்பின்னர் 21 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். தக் லைஃப் படத்திலும் கமல்ஹாசனுக்கு மனைவியாக நடித்துள்ளார் அபிராமி.
கமலின் தீவிர ரசிகை
நடிகை அபிராமி கமல்ஹாசனின் தீவிர ரசிகையாம். எந்த அளவுக்கு என்றால், அவரின் குணா படத்தை பார்த்த பின்னர் தான் தன்னுடைய பெயரை அபிராமி என மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது ஒரிஜினல் பெயர் திவ்யா. குணா படத்தில் கமல் அபிராமி என்கிற பெயரை அதிகம் உச்சரிப்பார். அதனால் அந்த பெயரையே தன்னுடைய பெயராக வைத்துக் கொண்டாராம். அப்படிப்பட்ட தீவிர ரசிகைக்கு கமலுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவாரா. அதனால் தான் தக் லைஃப் பட வாய்ப்பு வந்ததும் உடனடியாக ஓகே சொல்லி இருக்கிறார் அபிராமி.
முத்த சர்ச்சைக்கு அபிராமி பதிலடி
இந்நிலையில், முத்த சர்ச்சை பற்றி அபிராமி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : “அது 3 செகண்ட் கிஸ் சீன் தான். அது டிரெய்லரில் இடம்பெற்றது தான் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது அந்த காட்சிக்கு தேவையானது தான் என்பது படத்தில் பார்க்கும் போது தெரியும். ஆனால் அதைப்பற்றி இந்த அளவு பேசுவது தேவையில்லாதது. வேறு எந்த நடிகரும் முத்தக் காட்சியில் நடித்ததில்லையா? உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் நடித்தால் மட்டும் மக்கள் அதைப்பற்றி பேசத் தொடங்கிவிடுகிறார்கள். இப்போது இதெல்லாம் சாதாரணம்” என அபிராமி கூறி உள்ளார்.