- Home
- Career
- அடி தூள்! தேர்வே இல்லாமல் 1,130 பேருக்கு வேலை! 'லேட்டரல் என்ட்ரி' முறையில் எடுக்கப் போறாங்க!
அடி தூள்! தேர்வே இல்லாமல் 1,130 பேருக்கு வேலை! 'லேட்டரல் என்ட்ரி' முறையில் எடுக்கப் போறாங்க!
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1,130 பதவிகளுக்கு 'லேட்டரல் என்ட்ரி' முறையில் நிபுணர்களை நியமிக்க UPSC திட்டமிட்டுள்ளது. இந்த முறை மூலம், தனியார் துறை அல்லது பிற துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் நேரடியாக நியமிக்கப்படுவார்கள்.

போட்டித்தேர்வு இல்லாமல் அரசு வேலை!
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1,130 பதவிகளுக்கு, 'லேட்டரல் என்ட்ரி' எனப்படும் நேரடி ஆள்சேர்ப்பு முறையில் நிபுணர்களை நியமிக்க மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) திட்டமிட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'லேட்டரல் என்ட்ரி' முறை என்றால் என்ன?
'லேட்டரல் என்ட்ரி' என்பது அனுபவத்தின் அடிப்படையில் பணி வாய்ப்பை வழங்கும் முறை ஆகும். இது அரசுப் பணியில் இல்லாத, தனியார் அல்லது பிற துறைகளில் பணிபுரிந்த நிபுணர்களை, மத்திய அரசில் மூத்த பதவிகளுக்கு நேரடியாக நியமிக்கும் ஒரு முறையாகும். இது வழக்கமான யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு (UPSC Civil Services Exam) மூலம் அல்லாமல், குறிப்பிட்ட துறைகளில் திறமை மற்றும் அனுபவம் கொண்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு செயல்முறையாகும்.
1130 பணியிடங்கள்
இந்த முறை மூலம், 1 முதல் 13 ஆண்டுகள் வரையிலான அனுபவம் கொண்ட நிபுணர்களை, பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் உள்ள சுமார் 1,130 பணியிடங்களுக்கு நியமிக்க யூபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், அரசு நிர்வாகத்தில் புதிய திறமைகளையும், துறை சார்ந்த நிபுணத்துவத்தையும் கொண்டு வருவதாகும். பொருளாதாரம், நிதி, தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற துறைகளில் இருந்து நிபுணர்களை நியமிப்பதன் மூலம், கொள்கை வகுத்தல் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்தலாம் என மத்திய அரசு கருதுகிறது.
அனுபவத்துக்கு முன்னுரிமை
கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நேரடியாக நியமித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டில், 45 பணியிடங்களுக்கான 'லேட்டரல் என்ட்ரி' அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டது. ஆனால், இடஒதுக்கீடு கொள்கை தொடர்பான சர்ச்சைகள் காரணமாக அந்த அறிவிப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இந்த முறை, அந்தச் சிக்கல்களைத் தீர்த்து, புதிய முறையில் ஆள்சேர்ப்பு நடத்துகிறது.
“இந்த வேலைவாய்ப்பு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் தொடக்க நிலை பதவிகளைப் போல இல்லை. இந்த வாய்ப்பைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.” என என யூபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் கூறியுள்ளார்.
“இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்தப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தற்போதைய விதிகளின்படி நடக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகத்தை மேம்படுத்தும் நிபுணர்கள்
இந்த 'லேட்டரல் என்ட்ரி' முறை, நிர்வாகத்தில் திறமையை அதிகரிப்பதோடு, பொது மற்றும் தனியார் துறைக்கு இடையே ஒரு இணைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பாரம்பரிய அரசு பணியாளர்களுக்கு மத்தியில் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.