- Home
- Career
- TN PG TRB Results : "ஷாக் நியூஸ்".. 84,000 பேர் காலி.. பிஜி டிஆர்பி ரிசல்ட்டில் நடந்த "பேரதிர்ச்சி".. காரணம் என்ன?
TN PG TRB Results : "ஷாக் நியூஸ்".. 84,000 பேர் காலி.. பிஜி டிஆர்பி ரிசல்ட்டில் நடந்த "பேரதிர்ச்சி".. காரணம் என்ன?
PG TRB முதுகலை ஆசிரியர் தேர்வில் 84,000 பேர் தமிழ் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன? ஆங்கிலம் மற்றும் கணித பாட தேர்வர்கள் அதிகம் பாதிப்பு. டிஆர்பி தேர்வு முடிவுகளின் விரிவான அலசல் உள்ளே.

PG TRB மேஜர் பாடத்தில் 'சதம்'.. ஆனால் தமிழில் 'பூஜ்யம்'? - பி.ஜி டி.ஆர்.பி முடிவுகள் சொல்லும் அதிர்ச்சி பாடம்!
சென்னை: "கரையை நெருங்கியும் கப்பல் கவிழ்ந்த கதையாக," கடினமான மேஜர் பாடங்களில் 120 மதிப்பெண்களை அள்ளிக்குவித்த பல தேர்வர்கள், மிக எளிதான தமிழ் தகுதித் தேர்வில் கோட்டை விட்ட சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG TRB) தேர்வு முடிவுகள், தமிழகத் தேர்வர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.
வெளியானது முடிவு: 2.2 லட்சம் பேரின் விதி நிர்ணயம்
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 1996 காலிப்பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது. கடந்த அக்டோபர் 12-ம் தேதி நடந்த இத்தேர்வை மாநிலம் முழுவதும் 2,20,412 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1:1.25 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான (CV) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வெற்றிச் செய்திகளைத் தாண்டி, தேர்வு முடிவுகளில் மறைந்துள்ள ஒரு புள்ளிவிவரம் தான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
84,000 பேர் தோல்வி: தமிழ் என்ன அவ்வளவு கஷ்டமா?
மொத்தம் தேர்வு எழுதியவர்களில் சுமார் 84,000 பேர் தமிழ் தகுதித் தேர்வில் (Tamil Eligibility Test) தோல்வியடைந்துள்ளனர். இது சாதாரண எண்ணிக்கையல்ல. அரசுப் பள்ளி ஆசிரியராகப் போகும் ஒருவருக்கு, பத்தாம் வகுப்பு தரத்திலான தமிழில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் கூட எடுக்க முடியவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை.
ஆங்கிலம், கணித மேதைகளின் சறுக்கல்
துறை வாரியாகப் பார்த்தால் நிலவரம் இன்னும் மோசம்.
• ஆங்கிலத் துறை: தேர்வு எழுதிய 41,000 பேரில், சுமார் 18,000 பேர் தமிழில் தோல்வி.
• கணிதத் துறை: 40,000 பேரில் 13,000 பேர் தகுதி பெறவில்லை.
• தமிழ் மாணவர்கள்: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக, தமிழ் இலக்கியம் படித்த மாணவர்களிலேயே சுமார் 5,000 பேர் அலட்சியத்தால் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
'வெறும் தகுதித் தேர்வு தானே' என்ற அலட்சியம்
"மேஜர் சப்ஜெக்ட்டில் முழுகவனம் செலுத்துகிறேன், தமிழ் தகுதித் தேர்வுதானே.. எக்ஸாமுக்கு முந்தின நாள் பார்த்துக்கலாம்" என்ற மனப்பான்மைதான் இந்த இமாலயத் தோல்விக்குக் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருந்தாலே அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களை அலசியிருந்தாலே, தகுதிக்குத் தேவையான 20 மதிப்பெண்களைச் சுலபமாகப் பெற்றிருக்கலாம். ஆனால், ஹால் டிக்கெட் வந்த பிறகு படிக்க ஆரம்பித்தது மற்றும் முறையான திட்டமிடல் இல்லாதது பலரின் கனவைச் சிதைத்துள்ளது.
கனவு கலைந்த சோகம்
மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், தமிழில் தோல்வியடைந்த பல தேர்வர்கள், தங்கள் முதன்மைப் பாடங்களில் (Main Subject) 110 முதல் 120 மதிப்பெண்கள் வரை எடுத்துள்ளனர். பணி நியமனம் கிடைக்க 100% வாய்ப்பிருந்தும், தகுதித் தேர்வில் ஏற்பட்ட சறுக்கலால் அவர்கள் தகுதி நீக்கம் (Disqualified) செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த தேர்வுக்குத் தயாராவோர் கவனத்திற்கு..
"இனி வருங்காலங்களில் தமிழ் தகுதித் தேர்வை, சிலபஸின் ஒரு முக்கிய பகுதியாகவே கருதிப் படியுங்கள். நோட்டிபிகேஷன் வரும் வரை காத்திருக்காமல் இப்போதே பத்தாம் வகுப்பு புத்தகங்களை தூசி தட்டுங்கள்," என்பதே நிபுணர்கள் முன்வைக்கும் அறிவுரை.
முக்கிய குறிப்பு:
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சி.வி லெட்டர் (CV Call Letter) டிஆர்பி இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும். தபால் மூலம் வராது.

