பெண்களுக்கு 30% வேலைவாய்ப்பு உறுதி! ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 30% ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளது. அனைத்து மகளிர் கிளைகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகளை வங்கி மேற்கொண்டு வருகிறது.

ஸ்டேட் வங்கியில் 30% பெண் ஊழியர்கள்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது பணியிடத்தில் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை 30% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
வங்கியில் பாலி சமத்துவம்
இது குறித்து வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் கிஷோர் குமார் அளித்த பேட்டியில், "வங்கியின் களப் பணியாளர்களில் (Frontline Staff) கிட்டத்தட்ட 33% பெண்கள் உள்ளனர். ஆனால், மொத்த ஊழியர்களைப் பார்க்கும்போது, பெண்களின் பங்களிப்பு 27% ஆக உள்ளது. இந்த சதவீதத்தை உயர்த்துவதன் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்திய வங்கித் துறையில் 2.4 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய பணியாளர்கள் தளத்தைக் கொண்ட எஸ்.பி.ஐ., அனைத்து மட்டங்களிலும் பெண்கள் முன்னேறக்கூடிய ஒரு பணியிடத்தை உருவாக்கத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெண்களுக்காக புதிய திட்டங்கள்
பாலின இடைவெளியைக் குறைக்க ஸ்டேட் வங்கி சில முக்கியத் திட்டங்களை செயல்படுத்துகிறது.
பணிபுரியும் தாய்மார்களுக்கு 'குழந்தை காப்பகப் படி' (Creche Allowance) கொடுக்கப்படுகிறது. மகப்பேறு விடுப்பு அல்லது நீண்ட கால விடுப்புக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பும் பெண்களுக்கு சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. பெண்களை தலைமைப் பொறுப்புகளுக்குத் தயார்ப்படுத்தும் திட்டங்கள் உள்ளன.
பெண்களுக்கான சுகாதாரத் திட்டங்கள்
பெண்களின் தனிப்பட்ட சுகாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள், கர்ப்பிணி ஊழியர்களுக்கு ஊட்டச்சத்து படி (Nutrition Allowance) மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கம் போன்ற பிரத்தியேகத் திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளது.
அனைத்து மகளிர் கிளைகள்
எஸ்.பி.ஐ. வங்கி தனது அனைத்து மகளிர் கிளைகளின் (All-women branches) எண்ணிக்கையை விரிவுபடுத்தி வருகிறது. தற்போது 340-க்கும் அதிகமான கிளைகள் பெண் ஊழியர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.