- Home
- Career
- தனியார் பள்ளியில் உங்கள் குழந்தை இலவசமாக படிக்கணுமா? அரசே பீஸ் கட்டும்! RTE சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடங்கியது!
தனியார் பள்ளியில் உங்கள் குழந்தை இலவசமாக படிக்கணுமா? அரசே பீஸ் கட்டும்! RTE சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடங்கியது!
RTE Admissions 2025 தமிழ்நாடு RTE சேர்க்கை 2025 அறிவிப்பு வெளியீடு. அக்டோபர் 6 முதல் 17 வரை விண்ணப்பிக்கலாம். ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முன்னுரிமை உண்டு.

RTE Admissions 2025 இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: விண்ணப்பம் தொடக்கம்!
தமிழ்நாட்டில், கல்வி உரிமைச் சட்டம் (RTE) 2025-க்கான சேர்க்கை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை விடுவித்ததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் அக்டோபர் 6 முதல் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை முழுவதும் அதிகாரப்பூர்வ RTE இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.
ஏற்கனவே சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு
இந்த கல்வியாண்டுக்கான RTE சேர்க்கையில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. நுழைவு வகுப்பில் (Entry-level class) ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியுள்ள குழந்தைகளும், RTE இடஒதுக்கீட்டின் கீழ் வர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தகுதியுள்ள குழந்தைகளை முறைப்படுத்த 10 நாட்கள் கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல ஏழை மாணவர்கள் பயன்பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியத் தேதிகள் குறித்த முழு விபரம்
• அக்டோபர் 6: சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியீடு.
• அக்டோபர் 7: பள்ளிகள் செப்டம்பர் 30 வரை நிரப்பப்பட்ட மொத்த இடங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
• அக்டோபர் 8: 25 சதவீத RTE இடங்கள் பள்ளியின் இணையதளத்தில் தெளிவாக வெளியிடப்படும்.
• அக்டோபர் 9: ஆதார், பிறந்த தேதி, முகவரி, வருமானம் மற்றும் சமூகச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
• அக்டோபர் 10 - 13: தகுதியுள்ள மற்றும் தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் பள்ளி அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும். ஆவணங்கள் விடுபட்டிருந்தால் சமர்ப்பிக்க அவகாசம் உண்டு.
• அக்டோபர் 14 - 17: இறுதிப் பட்டியல் வெளியீடு, இடங்கள் குறைவாக நிரப்பப்பட்டால் மாணவர்களை EMIS போர்ட்டலில் இணைத்தல். விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால், அக்டோபர் 16-ல் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சிறப்புப் பிரிவினருக்கு முன்னுரிமை
இந்த சேர்க்கை நடைமுறையில் சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாரிசுகள், திருநங்கை குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம், சமூகத்தில் பின்தங்கியுள்ள இந்தக் குழுக்களுக்கு சிறந்த கல்விக்கான வாய்ப்பு கிடைப்பதை அரசு உறுதி செய்கிறது.