- Home
- Career
- ஃபேஷன் டிசைனிங் படிக்க ஆசையா? நிஃப்ட் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
ஃபேஷன் டிசைனிங் படிக்க ஆசையா? நிஃப்ட் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
NIFT 2026 நிஃப்ட் 2026 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. முழு விவரம் உள்ளே.

NIFT 2026 விண்ணப்பத் தேதி நீட்டிப்பு - ஜவுளித் அமைச்சகம் அறிவிப்பு
தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் (NIFT), 2026-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஜனவரி 13 வரை நீட்டித்துள்ளது. இத்தகவலை ஜவுளித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. ஃபேஷன் டிசைனிங் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் nift.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்துடன் ஜனவரி 14 முதல் 16 வரை விண்ணப்பிக்க அவகாசம் இருந்த நிலையில், தற்போது தாமதக் கட்டணமின்றி ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தில் அதிரடி குறைப்பு
மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 2026-27 கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணத்தை நிஃப்ட் நிர்வாகம் குறைத்துள்ளது. பொதுப் பிரிவு (General), ஓபிசி (NCL) மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) கட்டணம் ரூ. 3,000-ல் இருந்து ரூ. 2,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான (PwD) கட்டணம் ரூ. 1,500-ல் இருந்து ரூ. 500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதி மற்றும் முறை
தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் இந்த நுழைவுத் தேர்வானது பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் காகித வழித் தேர்வு (Pen-paper based) என இரண்டு முறைகளிலும் இந்தத் தேர்வு நடத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 102 நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நாட்டின் முன்னோடி கல்வி நிறுவனம்
1986-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிஃப்ட், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்குத் தேவையான தொழில்முறை வல்லுநர்களை உருவாக்கி வரும் ஒரு முன்னோடி நிறுவனமாகும். சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் 19 வளாகங்களில் நிஃப்ட் செயல்பட்டு வருகிறது. ஃபேஷன் டிசைன், மேனேஜ்மென்ட் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

