- Home
- Career
- கடற்படையில் அக்னிவீர் கனவு! 10-வது, 12-வது முடித்தவர்களுக்கு பம்பர் வாய்ப்பு - அப்ளை பண்ண ரெடியா?
கடற்படையில் அக்னிவீர் கனவு! 10-வது, 12-வது முடித்தவர்களுக்கு பம்பர் வாய்ப்பு - அப்ளை பண்ண ரெடியா?
Indian Navy Agniveer இந்திய கடற்படையில் அக்னிவீர் SSR மற்றும் MR பணிகளுக்கான அறிவிப்பு வெளியீடு. மார்ச் 14 முதல் ஏப்ரல் 6 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Indian Navy Agniveer கடற்படையில் சேரத் துடிக்கும் இளைஞர்களுக்கு நற்செய்தி!
இந்திய கடற்படை, அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் (SSR), அக்னிவீர் (MR) மற்றும் அக்னிவீர் (SSR Medical Assistant) ஆகிய பணிகளுக்கான 2026-27 (01/2027 மற்றும் 02/2027) பேட்ச் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் எல்லைகளைக் காக்கும் பெருமைமிக்க கடற்படையில் சேர விரும்பும் தகுதியுள்ள இளைஞர்கள், வரும் மார்ச் 14 முதல் ஆன்லைன் மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடற்படையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்கள்!
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
• அக்னிவீர் SSR: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12-ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• அக்னிவீர் MR: 10-ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
• அக்னிவீர் SSR (Medical Assistant): 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (PCB) பாடங்களுடன் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01/2027 பேட்சிற்கு விண்ணப்பிப்பவர்கள் 01 டிசம்பர் 2004 முதல் 31 மே 2009-க்குள் பிறந்திருக்க வேண்டும். 02/2027 பேட்சிற்கு 01 மே 2005 முதல் 31 அக்டோபர் 2009-க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணமானவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை மற்றும் பயிற்சி!
கடற்படை அக்னிவீர் தேர்வுகள் இரண்டு நிலைகளாக நடைபெறும்:
1. நிலை 1 (INET): இது கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வாகும் (Computer Based Examination). இது மே 2026-ல் நடைபெற வாய்ப்புள்ளது.
2. நிலை 2: இதில் உடல்தகுதித் தேர்வு (Physical Fitness Test), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவை அடங்கும்.
தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களுக்கு ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்காவில் (INS Chilka) அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படும். நான்கு ஆண்டு காலப் பணிக்குப் பிறகு, தகுதியின் அடிப்படையில் 25% அக்னிவீரர்கள் நிரந்தரப் பணியாளர்களாகக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் கடைசித் தேதி!
விண்ணப்பிக்க விரும்பும் அனைத்துப் பிரிவினரும் ₹550 + 18% ஜிஎஸ்டி (மொத்தம் ₹649) கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மார்ச் 14 முதல் ஏப்ரல் 6, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அதனைச் சரிசெய்ய ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் திருத்த விண்டோ (Correction Window) திறக்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் joinindiannavy.gov.in என்ற இணையதளம் வாயிலாக விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

