Agniveer Recruitment: திருச்சியில் அக்னிபாத் வேலைவாய்ப்பு முகாம்! இப்போதே விண்ணப்பிக்கலாம்!
2023-24ஆம் ஆண்டுக்கான அக்னிபாத் வீரர்கள் தேர்வு திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க முடியும். ஆனால், இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர் கண்டிப்பாக திருமணம் ஆகாதவராக இருக்கவேண்டும்.
அக்னிவீர் - ஜெனரல், அக்னீவீர் - தொழில்நுட்பம், அக்னிவீர் - கிளர்க் / ஸ்டார் கீப்பர், அக்னீவீர் – டிரேட்ஸ்மேன் போன்ற பலவிதமான பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலமாக நிரப்பப்பட உள்ளன.
ஆள்சேர்ப்பு இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடக்கும். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைப்பு விடுக்கப்படும்.
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் மாதம் 15ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அக்னி பாத் வேலைவாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
விருப்பமும் தகுதியும் வாய்ந்த இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற வலைத்தளத்திற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
மத்திய அரசின் இந்த அக்னி பாத் என்ற திட்டம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் 4 ஆண்டுகள் மட்டும் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் வேலை பார்க்க முடியும். தேவையைப் பொறுத்து இவர்களில் 25 சதவீதம் வீரர்கள் நிரந்தரமாக பணியாற்றும் வாய்ப்பையும் பெறக்கூடும். 4 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தவுடன் ரூ.11 லட்சம் அக்னி வீர் சேவா நிதி வழங்கப்படும்.