- Home
- Career
- 100 சதவீதம் இலவச கல்வி தரும் "விஜய்" தகுதி ஸ்காலர்ஷிப் திட்டம்.! பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்.!
100 சதவீதம் இலவச கல்வி தரும் "விஜய்" தகுதி ஸ்காலர்ஷிப் திட்டம்.! பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம்.!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து 2026–27 ஆம் கல்வியாண்டிற்கான “விஜய் தகுதி ஸ்காலர்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவர்களுக்கு 100% இலவச கல்வி வழங்கப்படும்.

“விஜய் தகுதி ஸ்காலர்ஷிப்” திட்டம்
தமிழகத்தில் கல்வியில் திறமையான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மற்றும் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து 2026–27 ஆம் கல்வியாண்டிற்கான “விஜய் தகுதி ஸ்காலர்ஷிப்” திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தகுதியான மாணவர்களுக்கு 100 சதவீதம் இலவச கல்வி வழங்கப்பட உள்ளது.
மார்க் எடுத்தா போதும் செலவு செய்ய வேண்டாம்
முன்னதாக 2025–26 ஆம் கல்வியாண்டில், ரூ.2 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு 180-க்கும் மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முழு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதுடன், சிறந்த விளையாட்டு வீரர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வெற்றியின் தொடர்ச்சியாகவே, இந்த ஆண்டு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
2026–27 கல்வியாண்டிற்கான ஸ்காலர்ஷிப் பெற, 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தொடர்ந்து சிறந்த மதிப்பெண்கள் பெற்று, பிளஸ் 2 தேர்வில் 185-க்கும் மேல் கட்-ஆஃப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், தேசிய அல்லது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், உயர்கல்வி நாடுபவர்கள் மற்றும் ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கும் இந்த ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க காலம் இருக்கு
மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை உறுதிப்படுத்தும் மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்ப வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2026 ஆகும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://forms.gle/Vfvry5Wru4beQ64JA என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
திறமைக்கும் உழைப்புக்கும் சரியான வாய்ப்பு
நிதி நெருக்கடி காரணமாக எந்த மாணவரும் கல்வியில் பின்தங்கி விடக்கூடாது என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். திறமைக்கும் உழைப்புக்கும் சரியான வாய்ப்பு வழங்கும் இந்த “விஜய் தகுதி ஸ்காலர்ஷிப்” திட்டம், பல மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கும் ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

