படிச்சு முடிச்ச கையோட வேலை! கைநிறைய சம்பளம்.. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!
இந்திய எக்ஸிம் வங்கி 2026-ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. டெபுடி மேனேஜர் மற்றும் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிகளில் மொத்தம் 60 காலியிடங்கள் உள்ளன. இறுதி ஆண்டு மாணவர்கள் உட்பட, இந்த மத்திய அரசு வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எக்ஸிம் வங்கி வேலைவாய்ப்பு
இந்திய அரசின் முன்னணி நிதி நிறுவனமான இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (EXIM Bank), 2026-ம் ஆண்டிற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு வேட்டையைத் தொடங்கியுள்ளது. வங்கித் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்காக 'டெபுடி மேனேஜர்' மற்றும் 'மேனேஜ்மென்ட் டிரெய்னி' ஆகிய இரண்டு முக்கியப் பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தேடி வருகிறது எக்ஸிம் வங்கி.
பதவிகளும் காலியிடங்களும்
இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் வங்கி செயல்பாடுகள் பிரிவில் (Banking Operations) 20 டெபுடி மேனேஜர் பணியிடங்களும், 40 மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த வேலைக்குத் தகுதி பெற நீங்கள் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், நிதி (Finance), சர்வதேச வணிகம் அல்லது வெளிநாட்டு வர்த்தகம் போன்ற துறைகளில் எம்பிஏ (MBA) அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் (CA) முடித்தவர்களுக்கும் முன்னுரிமை உண்டு.
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பட்டப்படிப்பு மற்றும் முதுகலை இரண்டையும் முழுநேரப் படிப்பாக (Full-time) முடித்திருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி அல்லது பகுதிநேரப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க முடியாது.
இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் வாய்ப்பு!
டெபுடி மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக கடன் மதிப்பீடு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிதி சார்ந்த பணிகளில் அனுபவம் இருப்பது அவசியம்.
அதே சமயம், இப்போது முதுகலை அல்லது CA இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் ஒரு நற்செய்தி உள்ளது! 2026 ஜனவரியில் தேர்வு எழுதி முடிவுகளை எதிர்நோக்கி இருப்பவர்கள் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
இந்த அரசு வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ₹600 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குச் சலுகையாக ₹100 மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.eximbankindia.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
• டெபுடி மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 17 முதல் பிப்ரவரி 1 வரை கால அவகாசம் உள்ளது.
• மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு ஜனவரி 26 முதல் பிப்ரவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் அதிகாரமிக்க வங்கியில் பணிபுரிய இது ஒரு அரிய வாய்ப்பு. தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

